< Back
மாநில செய்திகள்
குண்டும், குழியுமாக காணப்படும் கடற்கரை சாலை
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

குண்டும், குழியுமாக காணப்படும் கடற்கரை சாலை

தினத்தந்தி
|
30 Oct 2022 12:15 AM IST

கோடியக்கரையில் குண்டும், குழியுமாக காணப்படும் கடற்கரை சாலை சீரமைக்கப்படுமா? என மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

வேதாரண்யம்:

கோடியக்கரையில் குண்டும், குழியுமாக காணப்படும் கடற்கரை சாலை சீரமைக்கப்படுமா? என மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மீன்பிடி சீசன்

வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை ஊராட்சியில் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் ஏராளமானோர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கோடியக்கரை பகுதியில் தற்போது மீன்பிடி சீசன் காலம் என்பதால் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்துடன் இங்கு வந்து தங்கி 6 மாத காலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது மீன்பிடி சீசன் தொடங்கி உள்ளதால் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும் மீன் வாங்குவதற்கு கோடியக்கரைக்கு வருகின்றனர்.

குண்டும், குழியுமான சாலை

ஒரு நாளைக்கு 2 முதல் 5 டன் வரை 50-க்கும் மேற்பட்ட மீன்வகைகள் பிடிக்கப்பட்டு தமிழகம், கேரளா, ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோடியக்கரை பஸ் நிறுத்தத்தில் இருந்து கடற்கரைக்கு செல்லும் 1 கிலோ மீட்டர் சாலை சேதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

சிறிதளவு மழை பெய்தால் கூட சாலையில் உள்ள பள்ளங்ளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இரவு நேரங்களில் ேமாட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதனால் வெளியூர்களில் இருந்து மீன்கள் வாங்க வரும் வியாபாரிகள் அவதி அடைகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

தினந்தோறும் இந்த சாலை வழியாக 100-க்கான வாகனங்களில் பல்வேறு பகுதிகளுக்கு மீன்கள் கொண்டு செல்லப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்களை அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முக்கியத்துவம் வாய்ந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்