மதுரை
மதுரையில் ரூ.206 கோடியில் 8 தளங்களுடன் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம்-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்இன்று திறந்து வைக்கிறார்
|மதுரையில் ரூ.206 கோடியில் 8 தளங்களுடன் பிரமாண்டமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) திறந்து வைக்கிறார்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
வேகமாக நடந்த பணிகள்
கலைஞர் நூலகம் கட்ட மதுரை புதுநத்தம் சாலையில் சுமார் 2.56 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு கலைஞர் நூலகம் கட்டுவதற்கு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதனைத்தொடர்ந்து அங்கு பணிகள் மிக வேகமாக நடந்து வந்தன.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை வந்த போதெல்லாம் கலைஞர் நூலக கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். மேலும் அவரது உத்தரவின்பேரில் அமைச்சர் எ.வ.வேலு அடிக்கடி வந்து கலைஞர் நூலக கட்டுமான பணிகளை ஆய்வு செய்து துரிதப்படுத்தி வந்தார்.
முதல்-அமைச்சரின் கண்காணிப்பில் கலைஞர் நூலக பணிகள் மின்னல் வேகத்தில் நடந்தன. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலில் 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவு-பகலாக பணியாற்றினர். அதன் பலனாக 18 மாதத்திற்குள் கட்டி முடிக்க வேண்டிய பணிகள், 17 மாதங்களில் நிறைவடைந்தன.
கலைஞர் நூலகம் நுட்பமான கட்டிட கலைநயத்துடன், 2 லட்சத்து 13 ஆயிரம் சதுர அடி பரப்பில் கீழ்தளம், தரைத்தளம் உள்ளிட்ட 8 தளங்களுடன் உலகத்தரத்தில் கட்டப்பட்டுள்ளது. அதன் மொத்த திட்ட மதிப்பீடு ரூ.205 கோடியே 91 லட்சம் ஆகும். அதில் நூலகத்தின் கட்டிட செலவு ரூ.120 கோடியே 75 லட்சம்.
நாற்காலிகள் மற்றும் அலமாரிகளுக்கான செலவு ரூ.16 கோடியே 90 லட்சம். கூடுதல் வசதிகளுக்கான செலவுகள் ரூ.13 கோடியே 26 லட்சம். புத்தகங்கள் வாங்கிய செலவு ரூ.60 கோடி. கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்கள் செலவு ரூ.5 கோடி.
கருணாநிதி சிலை
ஆரம்பத்தில் 2.56 ஏக்கர் நிலம் நூலகம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டது. தற்போது அருகில் உள்ள 1 ஏக்கர் அரசு நிலமும் நூலகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது கலைஞர் நூலகத்தின் மொத்த பரப்பளவு 3.56 ஏக்கர் ஆகும். கூடுதலாக எடுக்கப்பட்ட 1 ஏக்கர் நிலத்தில் திறந்த வெளி அரங்கம் ரூ.2 கோடியே 50 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது.
கலைஞர் நூலகமானது முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதி, நகரும் படிக்கட்டுகள், லிப்ட் வசதி,, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட அம்சங்களுடன் அமைந்திருக்கிறது. சுமார் 6 லட்சம் புத்தகங்கள் வைக்கும் திறன் கொள்ளளவு கொண்ட இந்த நூலகத்தில் தற்போது முதல் கட்டமாக தமிழில் 1.20 லட்சம் புத்தகங்களும், ஆங்கிலத்தில் 1.30 லட்சம் புத்தகங்களும் என மொத்தம் 3½ லட்சம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
நூலகத்தின் சிறப்பு அம்சமாக சிறுவர்கள் பிரிவு, பார்வையற்றோருக்கான பிரிவு, கீழ் தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பிரிவு, சிறுவர் அறிவியல் பூங்கா, போட்டி தேர்வு புத்தகங்கள் பகுதி, மாநாட்டு கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நூலக பணிகள் டிஜிட்டல் முறையில் மட்டுமே நடைபெறும். மூன்றாம் பாலினத்தவர்களுக்காக ஒவ்வொரு தளத்திலும் கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. நூலகத்தின் நுழைவு வாசலில் கருணாநிதி சிலை நிறுவப்பட்டுள்ளது.
உலகில் உள்ள பெரிய நூலகங்களுக்கு எல்லாம் சவால் விடும் வகையில் கட்டி எழுப்பப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம், கல்வி திருநாளாக காமராஜருக்கு புகழ் சேர்க்கும் ஜூலை 15-ந் தேதி (அதாவது இ்ன்று) திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
திறப்பு விழா
அதன்படி மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழா இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.
இதற்காக இன்று பகல் 11.30 மணி அளவில் விமானத்தில் மதுரை வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் அவர் ஓய்வெடுக்கிறார்.
பின்னர் மாலையில் அங்கிருந்து புறப்பட்டுச்செல்லும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் நூலகத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். அதன்பின் போலீஸ் ரிசர்வ் லைன் மைதானத்தில், கலைஞர் நூலக திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதற்காக அங்கு பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கப்பட்டுள்ளன.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசுகிறார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரவேற்று பேசுகிறார். அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார், எச்.சி.எல். நிறுவன தலைவர் ரோஷிணி நாடார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலரும் கலந்து கொள்கின்றனர். பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் சந்திர மோகன் நன்றி கூறுகிறார். விழாவில் 3 ஆயிரத்து 500 கல்லூரி மாணவர்களும், 6 ஆயிரத்து 500 பள்ளி மாணவர்களும் கலந்துகொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.