சென்னை
சென்னை விமான நிலையத்தில் 2-வது ஓடுபாதைக்கு இடையூறாக உள்ள கட்டிடங்களை அகற்ற வேண்டும் - ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவு
|சென்னை விமான நிலையத்தில் 2-வது ஓடுபாதைக்கு இடையூறாக உள்ள கட்டிடங்களை அகற்ற வேண்டும் என ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள், விமான சேவை, விரிவாக்கம் குறித்து விமான நிலைய ஆலோசனை குழு ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், விமான நிலைய ஆலோசனை குழு தலைவரும், தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி. தலைமை தாங்கினார். கூட்டத்தில் சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், எம்.எல்.ஏ.க்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, சென்னை மாநகராட்சி, விமான நிலைய ஆணையகம், மத்திய தொழிற்படை, போலீஸ், சுங்க இலாகா, குடியுரிமை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சென்னை விமான நிலைய முனையங்கள் மற்றும் விமான ஓடுபாதை பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாடுகள், விமானங்கள் தரையிறங்கும் போது எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 2.8 கி.மீ நீளம் கொண்ட விமான நிலைய 2-வது ஓடுபாதையில், 2.1 கி.மீ தூரம் வரை தான் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 700 மீட்டர் தூரம் வரை ஓடுபாதையை பயன்படுத்த இடையூறாக உள்ள கட்டிடங்களை விரைவாக அகற்றப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. விமானங்கள் சென்னையில் தரையிறங்கும் போது காமராஜர் உள்நாட்டு முனையம், அண்ணா பன்னாட்டு முனையம் என அறிவிப்பு செய்யப்பட வேண்டும் என விமான நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது.
மேற்கண்ட தகவல்கள் விமான நிலைய செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டு உள்ளது.