< Back
மாநில செய்திகள்
மாரத்தான் போட்டியில் வசூலான ரூ.3½ கோடியில் புற்றுநோயாளிகளுக்கு கட்டிடம்: முதல்-அமைச்சர் பேச்சு
மாநில செய்திகள்

மாரத்தான் போட்டியில் வசூலான ரூ.3½ கோடியில் புற்றுநோயாளிகளுக்கு கட்டிடம்: முதல்-அமைச்சர் பேச்சு

தினத்தந்தி
|
6 Aug 2023 8:42 PM GMT

மாரத்தான் போட்டியில் வசூலான ரூ.3 கோடியே 42 லட்சத்து 50 ஆயிரத்தில் ராயப்பேட்டை மருத்துவமனையில் புற்றுநோயாளிகளுக்கு கட்டிடம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

கலைஞர் நினைவு நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டியின் பரிசளிப்பு விழா சென்னை தீவுத்திடலில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றிபெற்ற வீரர்-வீராங்கனை-திருநங்கைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மனோ தங்கராஜ், எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் கலந்து கொண்டனர்.

ஓட்ட நாயகன்

விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

அமைச்சர் மா.சுப்பிரமணியன் செயல்பாட்டில் ஒரு 'மாரத்தான்' அமைச்சராக விளங்கி கொண்டிருக்கிறார். அவரை மா.சுப்பிரமணியன் என்பதற்கு பதில் மாரத்தான் சுப்பிரமணியன் என்றுதான் அதிகம் அழைக்க தொடங்கி இருக்கிறார்கள். அவரைப் போல யாரும் ஓட முடியாது. அது நானாக இருந்தாலும் சரி, இங்கே இருக்கக்கூடிய அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, சேகர் பாபு, மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனாக இருந்தாலும் சரி, இப்படி ஓட வேண்டும் என்று சொன்னாலே, எங்களுக்கு வியர்த்துவிடும்.

அந்த அளவிற்கு நம்முடைய மா.சுப்பிரமணியன் ஓடக்கூடியவர். அவர் உள்ளூரில் மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கக்கூடிய மாநிலங்கள் மட்டுமல்ல, உலகெங்கும் பல நாடுகளுக்கு சென்று ஓடியுள்ளார். அந்த பெருமையும் அவருக்கு உண்டு. ஆட்டநாயகன் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம், இவர் ஓட்டநாயகன்.

கின்னஸ் சாதனை

இந்தநிலையில் இந்த மாரத்தான் சாதனையை மா.சுப்பிரமணியன் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை மாரத்தான் போட்டியாக அவர் கொண்டாடி காட்டி இருக்கிறார். இந்த ஆண்டு, கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டியில், 73 ஆயிரத்து 206 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்தப் போட்டி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது. கலைஞர் என்றாலே கின்னஸ் சாதனைதான்.

இந்த போட்டியில் 50 ஆயிரத்து 629 ஆண்களும், 21 ஆயிரத்து 514 பெண்களும் பங்கேற்று ஓடியிருக்கிறார்கள். உலகத்திலேயே முதன்முறையாக, திருநங்கைகள், திருநம்பிகள் ஆயிரத்து 63 பேர் பங்கேற்று ஓடி, ஒரு மிகப் பெரிய சாதனையை படைத்திருக்கிறார்கள். அவர்களை ஊக்குவிக்க தி.மு.க. இளைஞரணி சார்பில் மாரத்தான் போட்டியிலே பங்கேடுத்த ஒவ்வொரு திருநங்கைகள், திருநம்பிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் அறிவித்து, அதை வழங்கி இருக்கிறார்.

புற்றுநோயாளிகளுக்கு கட்டிடம்

இந்த மாரத்தானில், அரசு உயர் அதிகாரிகள், அதாவது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருக்கிறார்கள். அதேபோல் கடலோர காவல்படை, ராணுவ வீரர்கள் 1,500 பேரும் பங்கேற்று ஓடியிருக்கிறார்கள். பல்வேறு வெளிநாட்டு தூதர்கள் வந்திருக்கிறார்கள். எனவே இது சாதாரண மாரத்தான் அல்ல, இது சமூகநீதி மாரத்தானாக அமைந்திருக்கிறது.

கலைஞர் நூற்றாண்டு மாரத்தான், இதுவரை உலகத்திலே எங்கும் நடைபெறாத வகையில், சிறப்பாக நடைபெற்று இருக்கிறது. இந்த ஆண்டுக்கான மாரத்தானில், 3 கோடியே 42 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வசூலாகி இருக்கிறது. அதையும் என்னிடம் மா.சுப்பிரமணியன் வழங்கி இருக்கிறார். அது ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான கட்டிடம் ஒன்று கட்டுவதற்கு இந்தத் தொகை பயன்படப்போகிறது.

கலைஞரின் எண்ணம் ஈடேறுகிறது

மாரத்தான் ஓட்டம் என்பது உடல் உறுதிக்கு மட்டுமல்ல, உள்ள உறுதிக்கும் அடித்தளமாக அமையும்.

நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். கூட்டு செயல்பாட்டை வலியுறுத்தும். இப்படியான போட்டிகள் அதிகம் நடத்தப்பட வேண்டும். ஏராளமான புதிய விளையாட்டு வீரர்களை உருவாக்கவும் இது பயன்படுகிறது. அனைத்திலும் தமிழ்நாடு வளர வேண்டும் என்று முத்தமிழறிஞர் கலைஞர் எண்ணினார். அந்த எண்ணம் இன்றைக்கு ஈடேறிக்கொண்டு இருக்கிறது.

இவ்வாறு முதல்-அமைச்சர் பேசினார்.

மேலும் மாரத்தான் மூலம் வசூலான 3 கோடியே 42 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் செய்திகள்