< Back
மாநில செய்திகள்
காட்டெருமை துப்பாக்கியால் சுட்டுக்கொலை
நீலகிரி
மாநில செய்திகள்

காட்டெருமை துப்பாக்கியால் சுட்டுக்கொலை

தினத்தந்தி
|
20 Oct 2023 4:00 AM IST

குன்னூர் அருகே காட்டெருமை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குன்னூர் அருகே காட்டெருமை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்டெருமை சுட்டுக்கொலை

நீலகிரி மாவட்டத்தில் சமீப நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, கரடி, காட்டெருமை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் அதிகமாக உலா வருகின்றன. இவ்வாறு வரும் காட்டெருமைகள் தனியார் தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலையோரம் சுற்றித்திரிந்து வருகின்றன. அந்த சமயங்களில் கழிவுநீர் தொட்டிகளில் விழுந்து இறக்கும் நிலை உள்ளது.

இந்தநிலையில் நேற்று குன்னூர் அருகே காட்டேரி அணை பகுதியில் சாலையோரம் காட்டெருமை இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம், குந்தா வனச்சரகர் சீனிவாசன் மற்றும் வனத்துறையினர், கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காட்டெருமை உடலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் காட்டெருமையின் தலையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்ததற்கான அடையாளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தங்கும் விடுதிகளில் விசாரணை

இதையடுத்து காட்டெருமையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அந்த பகுதியில் புதைக்கப்பட்டது. மேலும் காட்டெருமையின் உடல் உள் உறுப்புகள் ஆய்வுக்காக கோவையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து காட்டேரி, குன்னூர் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாராவது தங்கி உள்ளார்களா?, உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்து உள்ளவர்கள் யார்? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். காட்டெருமை சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

துப்பாக்கிச்சூடு

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

இறந்த காட்டெருமைக்கு 4 வயது இருக்கலாம். அதன் நெற்றியில் கூறாய்வு செய்த போது, உள்ளே ஒரு தோட்டா இருப்பது தெரியவந்தது. துப்பாக்கியின் ரகம் மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். வேட்டைக்காக காட்டெருமையை சுட வாய்ப்பு இல்லை. காட்டெருமை தாக்க வந்ததால், துப்பாக்கியால் சுட்டு இருக்கலாம். காயத்தின் தன்மையை பார்க்கும் போது மிக அருகில் இருந்து காட்டெருமையை சுட்டது போல் தெரிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடும் நடவடிக்கை

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், துப்பாக்கியால் சுடப்பட்டு காட்டெருமை இறந்த சம்பவத்தை சாதாரணமாக கடந்து செல்லக்கூடாது. நீலகிரியில் வனவிலங்குகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்