சென்னை
போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக வன்கொடுமை வழக்கு: செசன்சு கோர்ட்டு உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்டு
|போலீஸ் அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யும்படி மாவட்ட செசன்சு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை டி.பி.சத்திரம் போலீஸ் நிலைய முன்னாள் இன்ஸ்பெக்டர் தயால், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோருக்கு எதிராக வக்கீல் சுகுமார் என்பவர் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினார். அதில், இந்த இரு அதிகாரிகளும், கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்வதாக கூறியிருந்தார். இந்த புகாரை கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் ஹரிகுமார் விசாரித்து அளித்த அறிக்கையில், வக்கீல் சுகுமார் தான் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுகிறார் என்று கூறியிருந்தார். இதன்படி, வக்கீல் சுகுமாரை சரித்திர பதிவேடு குற்றவாளியாக போலீசார் அறிவித்தனர்.
இதையடுத்து வக்கீல் சுகுமார், சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில், போலீசார் உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளனர். எஸ்.சி. சமூகத்தை சேர்ந்த தன்னை அவமானப்படுத்தும் விதமாகவும், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் போலீசார் செயல்பட்டுள்ளனர். எனவே, அவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, போலீஸ் அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி என்.சதீஷ்குமார் விசாரித்தார். அப்போது, தனிநபர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட முதன்மை செசன்சு கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, போலீஸ் அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யும்படி முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து தீர்ப்பு அளித்தார்.