செங்கல்பட்டு
வாலிபர் வயிற்றில் இருந்த பிரஷ்கள், கிழிந்த துணிகள்; செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அறுவைசிகிச்சை மூலம் அகற்றம்
|வாலிபர் வயிற்றில் இருந்த டூத் பிரஷ்கள், கிழிந்த துணிகள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
வயிற்று வலியால் அவதி
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியை சேர்ந்தவர் சங்கர் (வயது 24). மது குடிக்கும் பழக்கம் உடையவர். இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மறுவாழ்வு மையத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை 4 மாதங்கள் தங்கி இருந்தார்.அப்போது அங்கு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சங்கர் பல்வேறு பொருட்களை விழுங்கியுள்ளார். இதனால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஒரு மாத காலமாக கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். பல்வேறு தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் அவருக்கு குணமாகவில்லை.
அறுவைசிகிச்சை
இதையடுத்து கடந்த மாதம் 30-ந்தேதி அவர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வயிற்றில் தேவையற்ற பொருட்கள் இருப்பதை பார்த்த டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த 3-ந்தேதி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர். நாராயணசாமி வழிக்காட்டுதலின் படி டாக்டர். வி.டி.அரசு தலைமையில் டாக்டர்கள் ராமதாஸ், சேரன், தீனதயாளன் ஆகியோர் கொண்ட குழுவினர் அறுவைசிகிச்சை மேற்கொண்டனர்.
டூத் பிரஷ்கள்
2 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையில் சங்கர் வயிற்றில் இருந்து 2 டூத் பிரஷ் 4 துண்டுகள், பல் துலக்கிய பிறகு நாக்கை சுத்தம் செய்ய பயன்படும் பிளாஸ்டிக் குச்சிகள் 25, பேண்ட் ஜிப்-2 மற்றும் கிழிந்த துணிகளை அகற்றினார்கள். உடல்நிலை தேறிய பின்னர் மனநல ஆலோசனைகள் வழங்கிய டாக்டர்கள் நேற்று சங்கரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
சங்கரை அறிமுகப்படுத்தி அறுவை சிகிச்சை குறித்து ஆஸ்பத்திரி டீன் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த அறுவை சிகிச்சையை நாங்கள் பெரிய சவாலாக ஏற்று வெற்றிகரமாக முடித்தோம். தற்போது சங்கர் நலமுடன் உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.