செங்கல்பட்டு
கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிள்-டெம்போ மோதிய விபத்தில் அண்ணன், தம்பி பலி
|கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிள்-டெம்போ மோதிய விபத்தில் அண்ணன், தம்பி பலியானார்கள்.
டெம்போ மோதியது
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி சிவாஜி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் அருண்ராஜ் (வயது 33) இவரது தம்பி தங்கராஜ் (26), இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வல்லாஞ்சேரி நோக்கி ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையம் அருகே வரும்போது முன்னால் அரசு பஸ் நின்று கொண்டிருந்தது. அதன் பின்னால் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டெம்போ கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் அருண்ராஜ், தங்கராஜ் இருவரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சாவு
ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அண்ணன், தம்பி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு தப்பிச்சென்ற டெம்போ டிரைவரை தேடி வருகின்றனர்.
இந்த விபத்தின் காரணமாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரே குடும்பத்தில் அண்ணன், தம்பி இருவரும் விபத்தில் பலியான சம்பவம் வல்லாஞ்சேரி சிவாஜி நகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.