< Back
மாநில செய்திகள்
பெண்களை ஆபாசமாக படம் எடுத்து பணம் பறித்த சகோதரர்கள் கைது
மாநில செய்திகள்

பெண்களை ஆபாசமாக படம் எடுத்து பணம் பறித்த சகோதரர்கள் கைது

தினத்தந்தி
|
31 Aug 2023 4:02 AM IST

பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரை பெருங்குடி கணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருடைய மகன்கள் முத்துராஜா (வயது 30), அங்குகுமார் (32).

சம்பவத்தன்று முத்துராஜா, 21 வயதான கல்லூரி மாணவி குளித்ததை அவருக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். அதை பார்த்த மாணவி அதிர்ச்சி அடைந்து அவரிடம் அந்த வீடியோவை அழிக்குமாறு கெஞ்சினார்.

அப்போது முத்துராஜா, "இது குறித்து நீ யாரிடம் எதுவும் தெரிவிக்க கூடாது. அப்படி கூறினால் ஏற்கனவே நீயும், உனது தங்கையும் உடை மாற்றுவதை நானும், எனது அண்ணனும் வீடியோ எடுத்து வைத்துள்ளோம். அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உங்களை வாழ விடாமல் செய்து விடுவோம்" என்று மிரட்டியுள்ளார். இதனால் அவர் யாரிடமும் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளார். ஆனால் அவர் அடிக்கடி அதை கூறி அந்த மாணவியை மிரட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில் மாணவி தனது பெற்றோரிடம் நடந்தது குறித்து தெரிவித்தார். உடனே அவர்கள் முத்துராஜா, அங்குகுமாரிடம் இது குறித்து கேட்டனர். அப்போது அவர்கள் உங்கள் மகள் படத்தை வெளியிட இருக்காமல் இருக்க வேண்டும் என்றால் ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். அப்படி கொடுக்கவில்லை என்றால் சமூக வலைத்தளத்தில் வீடியோவை வெளியிடுவதாக மிரட்டினர். அதை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் தெப்பக்குளம் போலீசில் புகார் அளித்தனர்.

அந்த புகாரில், மேற்கண்ட சகோதரர்கள் தங்கள் மகளை வீடியோ எடுத்தது குறித்தும், மேலும் அவர்கள் இருவரும் வேறு பெண்கள் தனியாக குளிக்கும் போதும், அவர்கள் உடைமாற்றும் போதும் அவர்களுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து வந்துள்ளனர். அந்த வீடியோவை காட்டி பெண்களை மிரட்டி அவர்களிடமிருந்து பணம் பறித்து வந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துராஜா, அவரது அண்ணன் அங்குகுமாரை கைது செய்து விசாரித்தனர். அதில் அவர்கள் பல பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து பணம் பறித்து வந்த திடுக்கிடும் தகவல் வெளியானது.

பின்னர் போலீசார் அவர்களின் செல்போன் மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்