< Back
மாநில செய்திகள்
காதல் திருமணம் செய்த வாலிபர் கொலையில் மைத்துனர் கைது; மேலும் 2 பேர் சிக்கினர்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

காதல் திருமணம் செய்த வாலிபர் கொலையில் மைத்துனர் கைது; மேலும் 2 பேர் சிக்கினர்

தினத்தந்தி
|
18 Jun 2023 12:15 AM IST

சாத்தான்குளத்தில் காதல் திருமணம் செய்த வாலிபர் கொலையில் மைத்துனர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தட்டார்மடம்:

சாத்தான்குளத்தில் காதல் திருமணம் செய்த வாலிபர் கொலையில் மைத்துனர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொத்தனார்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் செட்டியார் நடு தெருவைச் சேர்ந்தவர் துரைமுருகன். இவருடைய மகன் சிவசூர்யா (வயது 23), கொத்தனார். இவருடைய மனைவி முத்துலட்சுமி. இவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர்.

பின்னர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் முத்துலட்சுமி கணவரிடம் கோபித்து கொண்டு, சாத்தான்குளம் வடக்கு தெருவில் உள்ள தந்தை சங்கரன் வீட்டுக்கு சென்றார்.

மனைவியை பிரிந்து...

பின்னர் முத்துலட்சுமியின் அண்ணன் வெங்கடேஷ் (28), சிவசூர்யாவிடம் தனது தங்கையுடன் சேர்ந்து வாழுமாறு கூறினார். ஆனால், சிவசூர்யா இதனை ஏற்காமல், மைத்துனர் வெங்கடேஷின் குடும்பத்தினரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெங்கடேஷ் தனது நண்பர்களிடம் கூறி புலம்பியவாறு இருந்தார்.

இதையடுத்து வெங்கடேஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து சிவசூர்யாவை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அதன்படி நேற்று முன்தினம் இரவில் சிவசூர்யாவின் வீட்டுக்கு வெங்கடேஷ் நண்பர்களுடன் சென்றார். அங்கிருந்த சிவசூர்யாவிடம் வெங்கடேஷ் தனது தங்கையின் வாழ்க்கையை சீரழித்து விட்டாயே என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வெட்டிக்கொலை

அப்போது ஆத்திரமடைந்த வெங்கடேஷ், அவருடைய நண்பர்களான சாத்தான்குளம் வடக்கு ரத வீதியைச் சேர்ந்த ராசா மகன் நாராயணன், தெற்கு ரத வீதியைச் சேர்ந்த முருகன் மகன் முத்து கண்ணன் ஆகிய 3 பேரும் சேர்ந்து அரிவாளால் சிவசூர்யாவை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த சிவசூர்யா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவான வெங்கடேஷ், நாராயணன், முத்து கண்ணன் ஆகிய 3 பேரை வலைவீசி தேடினர்.

மைத்துனர் உள்பட 3 பேர் கைது

இந்த நிலையில் சாத்தான்குளம் பகுதியில் பதுங்கியிருந்த வெங்கடேஷ் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். சாத்தான்குளத்தில் காதல் திருமணம் செய்த வாலிபர் கொலையில் மைத்துனர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்