சென்னை
சொத்து தகராறில் தங்கையால் தீ வைத்து எரிக்கப்பட்ட அண்ணன் சாவு; கொலை வழக்காக மாற்றி போலீஸ் விசாரணை
|சொத்து தகராறில் அண்ணனை உயிருடன் எரித்துக்கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பெரம்பூர், சபாபதி தெருவைச் சேர்ந்தவர் முனிரத்தினம் (வயது 63). இவருடைய மனைவி அமுலு. இவர்களுக்கு குழந்தை இல்லை. அமுலு மனநிலை பாதிக்கப்பட்டு ஆந்திர மாநிலம், புத்தூரில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர்களுக்கு சொந்தமான வீட்டின் கீழ்தளத்தில் உள்ள ஒரு வீட்டில் இவரும், மற்றொரு வீட்டில் அவருடைய தங்கை தனலட்சுமியும்(60), மேல் தளத்தில் உள்ள வீட்டில் மற்றொரு தங்கை பாக்கியலட்சுமியின் கணவர் தாமோதரன் மற்றும் அவருடைய மகனும் வசித்து வருகின்றனர்.
தனலட்சுமிக்கும், அவருடைய அண்ணன் முனிரத்தினத்துக்கும் இடையே சொத்துத்தகராறு இருந்து வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த தனலட்சுமி, வீட்டின் அறையில் தூங்கி கொண்டிருந்த தனது அண்ணன் முனிரத்தினம் உடலில் பெட்ரோலை ஊற்றி உயிருடன் தீ வைத்து எரித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து திரு.வி.க. நகர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தனலட்சுமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவில் முனிரத்தினம் உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர்.