சென்னை
நடந்து சென்ற பெண்களிடம் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட அண்ணன், தம்பி கைது - 35 பவுன் தங்க நகைகள் மீட்பு
|சென்னையில் நடந்து சென்ற பெண்களிடம் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்து 35 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.
சென்னை வேளச்சேரி, பரங்கிமலை, பழவந்தாங்கல், மடிப்பாக்கம், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் நடந்து சென்ற பெண்களிடம் மோட்டார் சைக்கிள்களில் வரும் வாலிபர்கள் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு செல்வதாக புகார்கள் வந்தன. இதையடுத்து அடையாறு போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரன் உத்தரவின் பேரில் கிண்டி போலீஸ் உதவி கமிஷனர் சிவா, வேளச்சேரி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில், கண்ணகி நகர் எழில் நகரை சேர்ந்த ஜான் பாஷா (வயது 31), அவரது தம்பி ஹக்கீம் (24), மற்றும் சந்தோஷ்குமார் (22), விஜயகுமார் (30) ஆகிய 4 பேரை கைது செய்தனர். 4 பேர் மீதும் 10-க்கும் அதிகமான சங்கிலி பறிப்பு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது. இவர்களிடமிருந்து 35 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.