திருப்பத்தூர்
திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் மருந்து, மாத்திரைகளை சூறையாடிய அண்ணன், தம்பி கைது
|திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் புகுந்து கண்ணாடியை உடைத்து, மருந்து மாத்திரைகளை சூறையாடிய அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.
நிலத்தகராறு
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சொரங்கன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜோதிராஜன். இவரது மகன்கள் ஜானகிராமன் (வயது 30). தாமோதரன் (25). இவர்களது நிலத்தில் ரோஜா செடி பயிரிட்டுள்ளனர். பக்கத்து நிலத்தை சேர்ந்த ரவி மகன்கள் குமரேசன் (30), திருமூர்த்தி (28) ஆகிய 2 பேரும், நேற்று காலை அங்கு சென்று, பூக்கள் பயிரிடப்பட்டுள்ள நிலம் எங்களுக்கு சொந்தமானது' எனக்கூறியுள்ளனர். இதற்கு ஜானகிராமன், தாமோதரன் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த திருமூர்த்தி, குமரேசன் ஆகிய இருவரும் சேர்ந்து, ஜானகிராமன், தாமோதரனை சரமாரியாக உருட்டு கட்டை மற்றும் கையால் தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மருந்து, மாத்திரை சூறை
அதைத்தொடர்ந்து குமரேசனும், திருமூர்த்தியும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் ஜானகிராமன், தாமோதரனை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் பக்கத்தில் நின்றிருந்த ஜோதிராஜனையும் சரமாரியாக தாக்கினர்.
தொடர்ந்து அவர்கள், அவசர சிகிச்சை பிரிவு அறையின் கண்ணாடிகள் அனைத்தையும் அடித்து நொறுக்கி உள்ளனர். இதைக்கண்டு பணியில் இருந்த டாக்டர்கள், நர்சுகள் அதிர்ச்சியடைந்து அலறி கூச்சலிட்டனர். ஆனால் இவர்கள், டாக் டர்கள், செவிலியர்களையும் ஒழித்து விடுவதாக மிரட்டிவிட்டு, அங்கிருந்த விலை உயர்ந்த ஊசி மருந்து, மாத்திரைகள் ஆகியவற்றை சூறையாடி உள்ளனர். இதனால் டாக்டர்கள், நர்சுகள், நோயாளிகள் ஓட்டம் பிடித்தனர்.
அண்ணன், தம்பி கைது
இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று தாக்குதலில் ஈடுபட்ட குமரேசன், திருமூர்த்தி ஆகிய 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். பின்னர் திருப்பத்தூர் மருத்துவ அலுவலர் டாக்டர் கே. டி. சிவக்குமார், கொடுத்த புகாரின் பேரில் பொது சொத்தை சேதம் விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.