பெரம்பலூர்
2 வீடுகளின் பூட்டை உடைத்து 21 பவுன் நகை-வெள்ளி தட்டுகள் திருட்டு
|2 வீடுகளின் பூட்டை உடைத்து 21 பவுன் நகை-வெள்ளி தட்டுகள் திருட்டுபோனது.
வேப்பந்தட்டை:
நகைகள் திருட்டு
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள தழுதாழை கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதரன்(வயது 33). இவரது மனைவி நாகம்மாள் (22). இவர்களது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்று முன்தினம் நள்ளிரவு தனது வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். பின்னர் நள்ளிரவில் தழுதாழைக்கு வந்த அவர்கள் ஸ்ரீதரனின் தாய் வீட்டில் தங்கியுள்ளனர்.
நேற்று காலை எழுந்து அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதற்குள் இருந்த தங்கச்சங்கிலி, தாலிக்கொடி, நெக்லஸ் உள்ளிட்ட 21 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
கடிகாரம்-வெள்ளி தட்டுகள்
இதேபோல் அதே பகுதியில் உள்ள தங்கராசு (73) என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் இருந்த 2 கை கடிகாரம், 2 வெள்ளித்தட்டுகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து அரும்பாவூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் அந்த வீடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் இந்த சம்பவங்கள் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.