திருவள்ளூர்
பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் திருட்டு
|பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் மற்றும் பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் உள்ள கோரி மேடு பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 40). இவர் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
இவரது குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு மணிகண்டன் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டில் இருந்த ரூ.80 ஆயிரம், மடிகணினி, 2 செல்போன்கள், ஒரு தொலைக்காட்சி பெட்டி ஆகியவற்றை திருடி சென்றது தெரிய வந்தது.
திருட்டு சம்பவம் குறித்து அவர் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.