சென்னை
பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
|பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
ஆவடி அடுத்த பட்டாபிராம் வள்ளலார் நகரை சேர்ந்தவர் ஜெகன் (வயது 39). இவர் சென்னை தனியார் கண் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்திரலேகா. இவர் சென்னை மவுண்ட் ரோட்டில் தனியார் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்கிறார்.
நேற்று முன்தினம் காலை ஜெகனின் தாயார் கோமதிக்கு உடல்நிலை சரியில்லாததால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவர் சென்று விட்டார். இதையடுத்து கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். மருத்துவமனைக்கு சென்ற ஜெகனின் தாயார் கோமதி நேற்று மாலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்கம் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கோமதி ஜெகனுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த ஜெகன் வீட்டிற்குள் சென்று பார்த்த போது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று வீட்டின் அறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து 6 பவுன் நகையை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஜெகன் கொடுத்த புகாரின் பேரில் பட்டாபிராம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.