பெரம்பலூர்
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
|வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வீட்டின் பூட்டு உடைப்பு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெரியவடகரை-கவர்பணை சாலையில் வசித்து வருபவர் பரிதாேபகம் (வயது 42). இவரது கணவர் ரகமத்துல்லா. இவர் திருச்சி மாவட்டம் கோட்டப்பாளையம் பள்ளிவாசலில் ஹஜ்ரத் ஆக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் பரிதாபேகம் கணவர் ஊருக்கு வராத போது அருகே உள்ள தம்பி அப்துல்நசீர் வீட்டில் தங்குவது வழக்கம்.
நேற்று முன்தினம் தம்பியின் வீட்டில் தூங்கிவிட்டு நேற்று தனது வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
நகை, பணம் திருட்டு
இதனால் அதிர்ச்சி அடைந்த பரிதாபேகம் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ திறந்து கிடந்தது. மேலும் அதில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 1¼ பவுன் நகை மற்றும் ரூ.1¼ லட்சம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கை.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.