திருச்சி
வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகைகள் திருட்டு
|வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
கொள்ளிடம்டோல்கேட்:
நகைகள் திருட்டு
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 38). இவர் ஓமியோபதி மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை நிமித்தமாக செந்தில்குமார் வெளியூர் சென்றார். அவரது மனைவி கீதா(33), 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் நேற்று காலை செந்தில்குமார் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது முன்பக்க அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
பணம் தப்பியது
இது குறித்து தகவல் அறிந்த லால்குடி உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு அஜய்தங்கம், சமயபுரம் இன்ஸ்பெக்டர் கருணாகரன், கொள்ளிடம் சப்-இன்ஸ்பெக்டர் ரெஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் நள்ளிரவில் கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் பீரோவின் மேல் ஒரு டப்பாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.20 ஆயிரம் மர்ம நபர்கள் கையில் சிக்காமல் தப்பியது. இந்த திருட்டு சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
விஷம் குடித்த பெண்
*சமயபுரம் பார்க் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் என்ற ஜீனத். இவரது மனைவி ஜெயந்தி(27). இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. இந்நிலையில், ஜெயந்தி தனது நகையை அவரது பெற்றோரிடம் கொடுத்திருந்ததாக தெரிகிறது. இதையறிந்த ஜீனத் நகையை வாங்கி வரக்கூறி, அவரை கண்டித்ததாகவும், இதனால் ஜீனத் மீது லால்குடி அனைத்து மகளிர் போலீசில் ஜெயந்தி புகார் அளித்ததாகவும் தெரிகிறது. மேலும் சமயபுரம் அம்பலக்கார தெருவில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்ற ஜெயந்தி நேற்று முன்தினம் பூச்சி மருந்தை(விஷம்) குடித்து, மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வரதட்சணை கொடுமையால் அவர் விஷம் குடித்தாரா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே செல்போன் மூலம் ஆன்லைனில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நல்லபொன்னம்பட்டியை சேர்ந்த பெரியசாமியை(46), தனிப்படை போலீசார் பிடித்து புத்தாநத்தம் போலீசில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.
3 பேர் கைது
*ராம்ஜிநகரை அடுத்துள்ள அரியாவூர் சோமாசி பட்டியை சேர்ந்தவர் மதியழகன்(43). இவர் நேற்று அதிகாலை திருச்சி காந்தி மார்க்கெட் சென்று காய்கறிகள் வாங்கிக் கொண்டு, பஸ்சில் வீட்டிற்கு திரும்பியபோது, அவரது சட்டைப்பையில் இருந்த ரூ.500-ஐ ஒருவர் திருட முயன்றார். ஆனால் அவர் சுதாரித்துக்கொண்டு பார்த்தபோது 3 பேர் அங்கிருந்து தப்ப முயன்றனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் உதவியுடன் பிடித்து ராம்ஜிநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், பண்ருட்டி பெருமநாயக்கம்பாளையத்தை சேர்ந்த ஷேக் என்ற ஜெய் கணேஷ், விருத்தாசலம் ராமச்சந்திரன்பேட்டையை சேர்ந்த அன்புச்செல்வன் மற்றும் பெரம்பலூர் ரெட்டிமான்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்ற ஏழுமலை என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
*மணப்பாறையை அடுத்த மாலைமடைபட்டியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு திடீரென கியாஸ் சிலிண்டரில் இருந்து செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவால் திடீரென தீப்பிடித்தது. உடனடியாக ஈர சாக்கை கொண்டு அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.