பெரம்பலூர்
வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகைகள் கொள்ளை
|பெரம்பலூரில் பட்டப்பகலில் துணிகரமாக வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற திருடர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வாடகை வீடு
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வெங்கலத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 46). இவர் தனது மனைவி அமுதா(39), மகள் பவ்யா (15) ஆகியோருடன் பெரம்பலூர்-எளம்பலூர் ரோடு நேரு நகர், அகத்தியர் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கோவிந்தராஜ் அரியலூரில் டிராக்டர் விற்பனை நிலையத்தில் (ஷோரூம்) விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். பவ்யா அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் கோவிந்தராஜ் வசிக்கும் பகுதியின் அருகே புதிதாக வீடு ஒன்றும் கட்டி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் கோவிந்தராஜ் வேலைக்கும், பவ்யா பள்ளிக்கும் சென்று விட்டனர். இந்த நிலையில் காலை 11.30 மணியளவில் அமுதா வசிக்கும் வீட்டை பூட்டி விட்டு, புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமான பணிகளை பார்க்க சென்று விட்டார்.
வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு...
பின்னர் அவர் மதியம் 2.30 மணியளவில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் மெயின் கேட்டின் பூட்டும், கதவின் தாழ்ப்பாளும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அமுதா வீட்டினுள் சென்று பார்த்தபோது, படுக்கையறையில் இருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த மொத்தம் 17 பவுன் தங்க நகைகளும் மற்றும் ரூ.6 ஆயிரம் ரொக்கமும் திருடு போயிருந்தது. இதையடுத்து அவர் இது தொடர்பாக தனது கணவர் கோவிந்தராஜூக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அரியலூரில் இருந்து விரைந்து வந்து பார்த்த கோவிந்தராஜ் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
அதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் மோப்ப நாய் `நிஞ்சா' வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் துணிகரமாக நடந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.