அரியலூர்
வீட்டின் பூட்டை உடைத்து 10½ பவுன் நகைகள்-ரூ.2 லட்சம் திருட்டு
|வீட்டின் பூட்டை உடைத்து 10½ பவுன் நகைகள்-ரூ.2 லட்சம் திருட்டுபோனது.
தா.பழூர்:
குழந்தையின் சிகிச்சைக்காக...
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கீழமைக்கேல்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ராமன் மகன் விமல்குமார். இவர் சிங்கப்பூரில் சமையல் வேலை செய்து வருகிறார். விமல்குமாரின் மனைவி பிரபா. இவர், தனது 2 பெண் குழந்தைகள் மற்றும் மாமனார், மாமியாருடன் கீழமைக்கேல்பட்டியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விமல்குமாரின் இளைய மகள் கீழே விழுந்ததில், அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சை பெறுவதற்காக அரியலூரில் உள்ள தங்களது உறவினர் வீட்டில் பிரபா உள்ளிட்டோர் குடும்பத்துடன் தங்கி குழந்தைக்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
நகைகள்-பணம் திருட்டு
இந்நிலையில் கடந்த சில நாட்களாக விமல்குமாரின் வீட்டிற்கு வெளியே ஓரமாக காய்ந்து கொண்டிருந்த புடவை ஒன்று நேற்று காலை வீட்டு வாசலை மறைக்கும் வகையில் இருந்ததை பார்த்த அக்கம், பக்கத்தினர், சிகிச்சைக்கு சென்றவர்கள் மீண்டும் வீட்டிற்கு வந்து விட்டதாக நினைத்து, குழந்தையை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். ஆனால் வீட்டின் முன் பக்க இரும்பு கேட்டில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து வீட்டின் முகப்பு பகுதியை பார்த்தபோது, மரக்கதவின் கொண்டி பூட்டு நெம்பி உடைக்கப்பட்டு இருந்தது.
இது பற்றி அக்கம் பக்கத்தினர், இது பற்றி பிரபாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபா உடனடியாக கீழமைக்கேல்பட்டிக்கு வந்து, வீட்டை திறந்து பார்த்தபோது அனைத்து அறைகளிலும் பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கலைத்து வீசப்பட்டு இருந்தன. பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 7½ பவுன் சங்கிலி, 3 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ.2 லட்சம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இது குறித்து தா.பழூர் போலீசாருக்கு பிரபா கொடுத்த தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாக அப்பகுதியில் எந்த திருட்டு சம்பவமும் நடைபெறாமல் இருந்து வந்ததாக பொதுமக்கள் கூறுகின்றனர். மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.