விழுப்புரம்
டீக்கடை, பிரியாணி கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
|விழுப்புரத்தில் டீக்கடை, பிரியாணி கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
விழுப்புரம்
டீக்கடையில் திருட்டு
விழுப்புரம் நேருஜி சாலை காந்தி சிலை அருகில் டீக்கடை நடத்தி வருபவர் கண்ணன் (வயது 48). இவரும், கடை ஊழியர்களும் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர்.
இந்நிலையில் நேற்று காலை இதன் ஊழியர்கள், கடையை திறக்க வந்தபோது ஷட்டர் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். உடனே கடைக்குள் சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.
பிரியாணி கடை
இதே கொள்ளை கும்பல், இக்கடையின் பக்கத்தில் இருக்கும் சிக்கந்தர் என்பவருக்கு சொந்தமான பிரியாணி கடையின் ஷட்டர் கதவு பூட்டையும் உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த கல்லாப்பெட்டியை உடைத்து அதில் வைத்திருந்த ரூ.750-ஐ திருடிச்சென்றுள்ளனர்.
மேலும் அருகில் இருந்த நகை அடகு கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோது அந்த சமயத்தில் போலீசார் ரோந்து சுற்றி வருவதை அறிந்த கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதனால் அக்கடையில் இருந்த பொருட்கள் அதிர்ஷ்டவசமாக கொள்ளை போகாமல் தப்பியது.
இதுகுறித்து கடையின் உரிமையாளர்கள், விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றியும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.