பெரம்பலூர்
ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து சேலை, சட்டைகள்-பணம் திருட்டு
|ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து சேலை, சட்டைகள்-பணம் திருட்டுபோனது.
பெரம்பலூர் புறநகர் நான்கு ரோடு சந்திப்பு அருகே சத்திரமனையை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடம் உள்ளது. இங்கு பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள முத்துநகர் மேற்கு தெருவை சேர்ந்த முருகேசன்(வயது 62) என்பவர் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்னர் முருகேசன் கடையை பூட்டிவிட்டு தனது வீட்டிற்கு சென்றார். நேற்று காலை அந்த கடையின் பக்கத்து கட்டிடத்தில் 'கன்சல்டன்சி' நடத்தி வரும் சுபாஷ்சந்திரபோஸ், முருகேசனுடைய ஜவுளிக்கடையில் இரும்பு கதவின்(ஷட்டர்) பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து, முருகேசனுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து முருகேசன் கடைக்கு வந்து பார்த்தபோது, கடைக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 20 சேலைகள், 10 சட்டைகள், கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.2 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது. இது பற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் அங்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை சேகரித்தனர். மோப்பநாய் மூலம் துப்பு துலக்கப்பட்டது. இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜவுளிக்கடையில் துணிகள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.