திருச்சி
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை-பணம் திருட்டு
|வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை-பணம் திருட்டு போனது.
மணப்பாறை:
நகை-பணம் திருட்டு
மணப்பாறையை அடுத்த ஆண்டவர் கோவில் அருகே வசித்து வருபவர் சூசைமாணிக்கம்(வயது 55). இவர் பருத்திப்பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு, பொத்தமேட்டுப்பட்டி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நாடகத்தை பார்க்க சென்றார்.
பின்னர் அவர் நேற்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மாணவி-சிறுமி மாயம்
*திருச்சி பொன்னகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவரது மகள் யுவஸ்ரீ(17). பிளஸ்-2 மாணவியான இவர் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
* அகிலாபேட்டை மேலத்தெருவை சேர்ந்தவர் அனுசுயா (17), திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தந்தை சக்திவேலை பார்ப்பதற்காக தனது உறவினருடன் சென்றார். அப்போது கடைக்கு சென்ற உறவினர் திரும்பி வந்து பார்த்தபோது அனுசுயாவை காணவில்லை. இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
* ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் ரோடு தேவாலயம் பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கி கிடந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் பெயர் ரவி என்பது தெரியவந்தது. அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
* திருச்சி உய்யகொண்டான் திருமலையை சேர்ந்தவர் சதீஷ்கண்ணன் (44). கொத்தனாரான இவர் சம்பவத்தன்று குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்னர் இரவில் அவர் தூங்கச்சென்றார். மறுநாள் காலை அவரது மனைவி எழுந்து பார்த்தபோது, வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு சதீஷ்கண்ணன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கு
*முசிறியை அடுத்த நாச்சம்பட்டி கீழத்தெருவை சேர்ந்த நடு அய்யனான்(70) சம்பவத்தன்று சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின்பேரில் சீவம்பட்டி ராஜமாணிக்கம் மகன் ஜெயபால்(30) மீது முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
*முசிறி அருகே வேலகானத்தம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற ரெட்டியார் தெருவை சேர்ந்த ஆனந்தை(32) முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜதுரை கைது செய்தார்.