திருச்சி
வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை-பணம் திருட்டு
|வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை-பணம் திருட்டு போனது.
மணப்பாறை:
நகை-பணம் திருட்டு
மணப்பாறையை அடுத்த தெற்கு சேர்பட்டியை சேர்ந்தவர் சங்கீதா(வயது 30). இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு 100 நாள் வேலை திட்ட ேவலைக்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.1,500, 6 ஜோடி வெள்ளிக்கொலுசுகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
*மணப்பாறை பஸ் நிலையத்தில் இருந்து மீனவேலி நோக்கி அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. பஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது திடீரென பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்து விழுந்தது. இதனால் பஸ்சில் இருந்த மாணவ- மாணவிகள் மற்றும் பயணிகள் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி, கீழே இறங்கி வந்து பார்த்தபோது பஸ்சின் கண்ணாடியை உடைத்தவர்கள் யார்? என்பது தெரியவில்லை. இதையடுத்து பயணிகள் பஸ்சில் இருந்து இறக்கி விடப்பட்டனர். இது குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், பஸ்சின் கண்ணாடியை உடைத்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
*திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 5 நான்கு சக்கர வாகனங்களும், 2 இருசக்கர வாகனங்களும் என மொத்தம் 7 வாகனங்கள் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் கமிஷனர் காமினி தலைமையில், துணை கமிஷனர் ரவிச்சந்திரன், கூடுதல் துணை கமிஷனர் விக்னேஷ்வரன், அரசு தானியங்கி பணிமனை பொறியாளர் ஆகியோர் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டன. இதன் மூலம் விற்பனை தொகையாக ரூ.3 லட்சத்து 42 ஆயிரத்து 148 பெறப்பட்டது. இந்த தொகை அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.
பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
*எடமலைப்பட்டிபுதூர் விவேகானந்தர் தெருவை சேர்ந்த நடராஜனின் மனைவி முத்துலட்சுமி(56). இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டின் அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் முத்துலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இது குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி உமா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
*திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் பகுதியை சேர்ந்த அகஸ்டின் ராஜின் மனைவி ஜெயராணி(57). இவர் சம்பவத்தன்று தனது மகன் அந்தோணி விஜய்யுடன்(27) தூத்துக்குடிக்கு சென்றார். பின்னர் இவர்கள் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ஜெயராணியின் மூத்த மகன் ஆரோக்கிய பெலிக்ஸ் (29) அளித்த புகாரின்பேரில் பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் வழக்குப்பதிவு செய்து மாயமான தாயையும், மகனையும் தேடி வருகிறார்.