கரூர்
மாரியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை கொள்ளை
|லாலாபேட்டை அருகே மாரியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி அணிந்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவில் பூட்டு உடைப்பு
கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே புனவாசிப்பட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களிலும், தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அப்போது பக்தர்கள் தங்களது வேண்டுதல் களை நிறைவேற்றும் விதமாக அங்குள்ள 2 உண்டியல்களில் காணிக்கை செலுத்தி வருவது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பூஜை முடிந்தவுடன் இரவு பூசாரி கோவிலின் கதவை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்தநிலையில் நேற்று காலை கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. பின்னர் பக்தர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, 2 உண்டியல்களையும் காணவில்லை.
பணம் கொள்ளை
இதுகுறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, நள்ளிரவு 1 மணி அளவில் முகமூடி அணிந்த நிலையில் 50 வயது மதிக்கத்தக்க மர்மநபர் ஒருவர் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த 2 உண்டியல்களை பெயர்த்து எடுத்து கொண்டு, கோவிலின் பின்புறமாக வெளியே சென்றது பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் கோவிலின் பின்புறமாக சென்று ஆய்வு செய்தனர். அப்போது கோவிலில் இருந்த 2 உண்டியல்கள் மட்டுமே அங்கு கிடந்தன. அதில் இருந்த பணத்தை மர்மநபர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
போலீசார் வலைவீச்சு
மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து அந்த மர்மநபரை வலைவீசி தேடி வருகின்னர். மேலும், 2 உண்டியல்களிலும் எவ்வளவு பணம் இருந்தது என்பதை போலீசாரால் உறுதிப்படுத்த முடியவில்லை. கோவில்களில் உண்டியல்களை உடைத்து பணத்தை மர்மநபர் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.