கன்னியாகுமரி
வீட்டின் கதவை உடைத்து வெள்ளி கொலுசுகள் திருட்டு
|அருமனை அருகே வீட்டின் கதவை உடைத்து வெள்ளி கொலுசுகள் திருட்டு
அருமனை,
அருமனை அருகே உள்ள அண்டுகோடு பகுதியைச் சேர்ந்தவர் உஷாகுமாரி (வயது66). இவருடைய மகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனால், உஷா குமாரியும் மகளுடன் அங்கு வசித்து வருகிறார். அண்டுகோட்டில் இவர்களுக்கு சொந்தமான வீட்டை அதே பகுதியை சேர்ந்த உஷா குமாரி பராமரித்து வருகிறார். இவர் அவ்வப்போது வீட்டுக்கு வந்து சுத்தம் செய்துவிட்டு ெசல்வது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் உஷா குமாரி வீட்டுக்கு வந்த போது பின்பக்கம் உள்ள கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் உஷா குமாருக்கு தகவல் தெரிவித்தார். உஷாகுமாரி அருமனை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சம்பவத்தன்று இரவு மர்ம நபர்கள் வீட்டு வளாகத்தில் புகுந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமரா இணைப்புகளை துண்டித்துள்ளனர். தொடர்ந்து கடப்பாரையால் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து அலமாரிகளை உடைத்து நகை, பணம் உள்ளதா? என தேடியுள்ளனர்.
அங்கு விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லாத நிலையில் சில வெள்ளி கொலுசுகள் மட்டுமே சிக்கியுள்ளது. உடனே மர்ம நபர்கள் அவற்றை எடுத்துவிட்டு கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் உபகரணத்தையும் திருடி கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.