பிராட்வே பஸ் நிலையம் மாதிரி புகைப்படம் வெளியீடு
|பிராட்வேயில் இருந்து மாநகர பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை,
சென்னையில் மிகவும் பழமை வாய்ந்ததாகவும், சிறப்பு வாய்ந்த பஸ் நிலையமாகவும் பிராட்வே பஸ் நிலையம் திகழ்கிறது. இந்த பஸ் நிலையத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வரை தென்மாவட்டங்கள் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. பின்னர் போக்குவரத்து நெரிசல் காரணமாக தென் மாவட்டங்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டன.
பழமையான இந்த பஸ் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை வைத்து வந்தனர். இதைத் தொடர்ந்து, ரூ.823 கோடியில் நவீன வசதிகளுடன் வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து முனையமாக பிராட்வே பஸ் நிலையம் கட்டப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே பிராட்வேயில் 'மல்டி மாடல் இன்டகிரேஷன்' என்ற ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கும் பணிக்காக அடுத்த சில மாதங்களில் பிராட்வே பஸ் நிலையம் தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. தீவுத்திடலில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 கோடி செலவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன.
அதன்பிறகு பிராட்வே பஸ் நிலையம் இடிக்கப்பட்டு போக்குவரத்து முனையம் அமைக்கும் பணி தொடங்கப்படுகிறது. பிராட்வே பஸ் நிலையம் இருக்கும் இடத்தில் 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கொண்ட பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
குறளகம் கட்டிடம் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. இங்கிருந்து மெட்ரோ ரெயில் நிலையம், புறநகர் ரெயில் நிலையம் என அனைத்தையும் இணைக்கும் வகையில் 7 நடை மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், நவீன வசதிகளுடன் கட்டப்படவுள்ள சென்னை பிராட்வே பஸ் நிலையத்திற்கான மாதிரி புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 4 புகைப்பட மாடல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் ஒன்று தேர்வாகும். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பஸ் நிலையம் நடைமுறைக்கு வந்துவிட்டால் பிராட்வே பகுதி மிகப்பெரிய வணிக பகுதியாக மாறிவிடும் என்று கூறப்படுகிறது.