< Back
மாநில செய்திகள்
ஈரோட்டில் பட்டப்பகலில் நூதன திருட்டு:போலீஸ்போல் நடித்து மூதாட்டியிடம் 6½ பவுன் நகை அபேஸ்
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோட்டில் பட்டப்பகலில் நூதன திருட்டு:போலீஸ்போல் நடித்து மூதாட்டியிடம் 6½ பவுன் நகை அபேஸ்

தினத்தந்தி
|
13 March 2023 2:40 AM IST

ஈரோட்டில் பட்டப்பகலில் போலீஸ்போல் நடித்து மூதாட்டியிடம் நூதன முறையில் 6½ பவுன் நகையை அபேஸ் செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோட்டில் பட்டப்பகலில் போலீஸ்போல் நடித்து மூதாட்டியிடம் நூதன முறையில் 6½ பவுன் நகையை அபேஸ் செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

6½ பவுன் நகை

ஈரோடு அகில்மேடு வீதியை சேர்ந்தவர் அர்த்தனாரி. இவர் ஈரோடு அகில்மேடு மெயின் வீதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சம்பூர்ணா (வயது 60). நேற்று மதியம் இவர் ஓட்டலில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் சம்பூர்ணாவிடம் பேச்சு கொடுத்தார்கள். அவர்கள் 2 பேரும் தங்களை போலீசார் என்று அறிமுகப்படுத்தி கொண்டார்கள். பிறகு இந்த பகுதியில் வழிப்பறி சம்பவம் அதிகமாக நடந்து வருகிறது என்றும், அதனால் தங்க நகைகளை பாதுகாப்பாக எடுத்து செல்லுங்கள் என்றும் கூறி உள்ளனர். மேலும், சம்பூர்ணா அணிந்து இருந்த நகைகளை கழற்றி கொடுங்கள், அதை பாதுகாப்பாக காகிதத்தில் மடித்து கொடுப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.

அவர்களை போலீசார் என்று நம்பிய சம்பூர்ணாவும், அணிந்து இருந்த 6½ பவுன் நகையை கழற்றி கொடுத்து உள்ளார். அதை பெற்று கொண்ட அவர்களும் ஒரு காகிதத்தில் பொட்டலமாக மடித்து சம்பூர்ணாவிடம் கொடுத்து உள்ளனர். திருடர்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வழியில் பிரித்து பார்க்க வேண்டாம் என்றும், வீட்டுக்கு சென்ற பிறகு நகையை பாதுகாப்பாக எடுத்து வைக்கும்படியும் அவர்கள் கூறினார்கள்.

வலைவீச்சு

சம்பூர்ணா வீட்டுக்கு சென்ற பிறகு அந்த காகித பொட்டலத்தை எடுத்து பார்த்தார். அப்போது அதில் நகைக்கு பதிலாக கல் இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். அந்த நபர்கள் நகை மடித்த பொட்டலத்தை வைத்து கொண்டு, கல் உள்ள பொட்டலத்தை மாற்றி கொடுத்து ஏமாற்றியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் தனது கணவரிடம் தகவல் கொடுத்து உள்ளார்.

இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசில் சம்பூர்ணா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை அபேஸ் செய்த 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோட்டில் பட்டப்பகலில் நடந்த சென்ற மூதாட்டியிடம் போலீஸ்போல் நடித்த 2 பேர் 6½ பவுன் நகையை நூதன முறையில் அபேஸ் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
மேலும் செய்திகள்