தர்மபுரி
வரத்து குறைந்ததால்தர்மபுரியில் கத்தரிக்காய் விலை உயர்வுஉழவர் சந்தையில் கிலோ ரூ.25-க்கு விற்பனை
|தர்மபுரியில் வரத்து குறைந்ததால் கத்திரிக்காய் விலை உயர்ந்தது. தர்மபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ ரூ.25-க்கு விற்பனையானது.
கத்தரிக்காய்
அதிக சத்துக்கள் கொண்ட காய்கறிகளில் ஒன்றான கத்தரிக்காய் தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு ஆண்டின் அனைத்து காலங்களிலும் சந்தையில் கிடைக்கும் கத்திரிக்காய்க்கு எப்போதும் குறிப்பிடத்தக்க தேவை நிலவுகிறது.
கத்திரிக்காயில் வைட்டமின் பி சத்து அதிகமாக உள்ளது. இரும்புச்சத்து, கால்சியம் ஆகியவை இதில் நிறைந்துள்ளன.அதிக நார்ச்சத்தும், நீர்சத்தும் கொண்ட கத்திரிக்காயில் குறைந்த கலோரிகள் இருப்பதால் உடல் பருமனை குறைக்கும். நரம்புகளை பலப்படுத்தி சளி, இருமல்ஆகியவற்றை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
விலை உயர்வு
தர்மபுரி மாவட்டத்தில் கத்திரிக்காய் வரத்து சீராக இருப்பதால் குறுகிய காலத்தில் அதன் விலையில் குறிப்பிட்ட ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவதில்லை. அதே நேரத்தில் தேவை வழக்கத்தை விட உயரும்போது விலை கணிசமாக அதிகரிக்கும். கடந்த சில நாட்களாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.18 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் 1 கிலோ ரூ.20- க்கு விற்பனையான கத்திரிக்காய் விலை நேற்று கிலோவிற்கு ரூ.5 அதிகரித்தது.
வரத்து சற்று குறைந்த நிலையில் தேவை அதிகரித்ததால் இந்த விலை உயர்வு ஏற்பட்டது. தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று 1 கிலோ கத்திரிக்காய் ரூ.25-க்கு விற்பனையானது. வெளிமார்க்கெட்டுகளில் ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டது.