விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலையை இணைக்க பாலம்: விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது
|குமரிமுனையில் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் நினைவுப் பாறையையும் இணைக்கும் கடல் சார் பாதசாரிகள் பாலம் கட்டப்பட்டு வருகிறது.
சென்னை,
இந்தியப் பொருளாதாரத்தில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் சிறந்து விளங்குகிறது என்றால், அதற்கு காரணம் தமிழ்நாட்டின் சாலை கட்டமைப்பு வசதிகள் பெருகியுள்ளது என்பதுதான்.
1971-ம் ஆண்டில், கிராமங்களை நகரங்களுடன் இணைக்கும் இணைப்புச் சாலை திட்டத்தை அறிமுகப்படுத்தி தமிழ்நாடு முழுவதிலும் குக்கிராமங்களை எல்லாம் நகரங்களோடு இணைத்து சாலை வசதிகளை மேம்படுத்தினார் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. அதன் காரணமாக 2010-ல் இந்தியாவில் ஒவ்வொரு 100 சதுர கி.மீ. நிலப்பரப்பிலும் சராசரியாக 103 கி.மீ. நீளத்துக்குச் சாலைகள் அமைந்துள்ள போதிலும், தமிழ்நாட்டில் சராசரியாக 153 கி.மீ. நீளத்திற்கு சாலைகள் அமைந்து சாலை வசதிகளில் தமிழ்நாடு மிகச் சிறந்த மாநிலம் எனப் புகழ் வளர்த்தது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், தமிழ்நாட்டின் சாலை வசதிகளைப் பெருக்குவதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.
இந்தநிலையில், குமரிமுனையில் அய்யன் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் நினைவுப் பாறையையும் இணைக்கும் கடல் சார் பாதசாரிகள் பாலம் விரைவில் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவுத் திட்டங்களில் ஒன்றான குமரிமுனையில் அய்யன் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் நினைவுப்பாறையையும் இணைக்கும் கடல்சார் பாதசாரிகள் பாலம் 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணி விரைவில் முடிவடைந்து திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது.