< Back
மாநில செய்திகள்
தரைமட்ட பாலம் கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி
திருப்பூர்
மாநில செய்திகள்

தரைமட்ட பாலம் கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி

தினத்தந்தி
|
24 Feb 2023 10:42 PM IST

உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் அருகே தரைமட்ட பாலம் கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் அருகே தரைமட்ட பாலம் கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

தரைமட்ட பாலம்

உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் அருகே பொள்ளாச்சி-பழனி, உடுமலை- பொள்ளாச்சி நெடுஞ்சாலையை இணைக்கும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையின் குறுக்கே கழிவுநீர் செல்வதற்கு ஏதுவாக கட்டப்பட்டிருந்த தரைமட்ட பாலம் சேதம் அடைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வந்தவுடன் கழிவுநீர் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து தரைமட்ட பாலத்தை புதுப்பித்து தருமாறு வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பேரில் பணி தொடங்கப்பட்டது. அதன் பின்பு இன்று வரையிலும் நடைபெறவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

பொதுமக்கள் அவதி

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு செல்வதற்கு இந்த சாலை பெரிதும் உதவிகரமாக இருந்து வருகிறது. இதில் கட்டப்பட்டிருந்த தரைமட்ட பாலம் சேதம் அடைந்ததை யொட்டி கடந்த 8 மாதத்துக்கு முன்பு புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது. அதன் பின்பு இன்று வரையிலும் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மத்திய பஸ் நிலையத்திற்குள் சென்று மறுபகுதியை அடைய வேண்டிய சூழல் உள்ளது.

இதனால் அவ்வப்போது சிறு சிறு விபத்துகளும், பஸ் நிலையத்துக்குள் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றமும் சுகாதார சீர்கேடும் நிலவுகிறது.

மேலும் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து பொதுமக்களுக்கு உடல் நல குறைபாடுகளை ஏற்படுத்தி வருகிறது.

இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இணைப்பு சாலையில் கிடப்பில் போடப்பட்டுள்ள தரைமட்ட பாலம் கட்டுமான பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்