திருப்பூர்
நடைமேம்பாலத்தில் குப்பைகள் நிரம்பி வழிகின்றன.
|திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள நடைமேம்பாலத்தில் குப்பைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் பாதசாரிகள் இந்த பாலத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள நடைமேம்பாலத்தில் குப்பைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் பாதசாரிகள் இந்த பாலத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள நடைமேம்பாலத்தில் குப்பைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் பாதசாரிகள் இந்த பாலத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குப்பை கொட்டத்தான் பாலமா?
திருப்பூர் மாநகரில் வாகனப்போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளை பொதுமக்கள் எளிதில் கடந்து செல்வதற்கு வசதியாக ரெயில்நிலையம், டவுன்ஹால், பார்க் ரோடு, புஷ்பா ரவுண்டானா, நல்லூர் ஆகிய பகுதிகளில் நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான நடைமேம்பாலங்கள் சரியான வகையில் கண்காணிக்கப்படாமல் இருப்பதால் நடைமேம்பாலங்கள் குப்பை கொட்டும் இடமாக மாறி வருகின்றன. குறிப்பாக திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள நடைமேம்பாலத்தில் மிக அதிக அளவில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதில் பழைய ஆடைகள், எச்சில் உணவுகள், காலி மதுபாட்டில் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் என பல தரப்பட்ட குப்பைகள் இங்கு தேங்கி கிடக்கின்றன. இதனால் பாலத்தில் கடுைமயான துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் சிலர் இந்த பாலத்தை பொது கழிப்பிடம் போன்றும் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு முகம் சுழிக்க வைக்கும் வகையில் இந்த பாலம் இருப்பதால் பாதசாரிகள் இந்த பாலத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு ஆபத்து
இதுமட்டுமின்றி இந்த பாலத்தில் சிலர் மதுபோதையில் படுத்து கிடப்பதால் பெரும்பாலானவர்கள் இந்த பாலத்தை முற்றிலும் தவிர்த்து வருகின்றனர். இதனால் அதிக வாகனப்போக்குவரத்து கொண்ட இந்த சாலையை கடப்பதற்கு பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இடைவிடாமல் செல்லும் வாகனங்களுக்கு மத்தியில் மிகவும் ஆபத்தான வகையில் பொதுமக்கள் சாலையை கடந்து செல்கின்றனர். இதனால் குப்பை கொட்டுவதற்கு தான் பாலம் கட்டப்பட்டதா? என பாதசாரிகள் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பாலத்தின் சுகாதாரத்தை காப்பதற்கும், பாதசாரிகள் பாதுகாப்பான வகையில் சாலையை கடப்பதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. எப்போதாவது மட்டும் குப்பைகளை அப்புறப்படுத்தாமல், இதுபோன்ற நடைமேம்பாலங்கள் நல்ல முறையில் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.