தர்மபுரி
தர்மபுரியில் பயனற்று கிடக்கும் ரெயில்வே சுரங்கப்பாதை பயன்பாட்டுக்கு வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
|தர்மபுரியில் பயனற்று கிடக்கும் ரெயில்வே சுரங்கப்பாதை பயன்பாட்டுக்கு வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தர்மபுரியில் திறந்து 4 ஆண்டுகளாகியும் பயனற்று கிடக்கும் ரெயில்வே சுரங்கப்பாதை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சுரங்கப்பாதை
தர்மபுரி நகரில் அதிக வாகன போக்குவரத்து நெரிசல் கொண்ட பகுதிகளில் ஒன்றாக பென்னாகரம் சாலை திகழ்ந்து வருகிறது. இந்த சாலையில் உள்ள ரெயில்வே கேட் மூடப்படும் நேரங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை காணமுடியும். இதன் காரணமாக இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் குமாரசாமிபேட்டை ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நெடுஞ்சாலை துறை சார்பில் உயர்மட்ட ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்றது. கடந்த 2018- ம் ஆண்டு இந்த பணி நிறைவடைந்து ரெயில்வே மேம்பாலம் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. இந்த ரெயில்வே மேம்பாலத்தின் அருகே வடக்கு பகுதியில் பொதுமக்கள் தண்டவாள பகுதியை எளிதாக கடக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. மேம்பாலம் திறக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆன நிலையிலும் சுரங்கப்பாதை இதுவரை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.
புதர்கள் மண்டி
இந்த சுரங்கப்பாதைக்குள் மழைகாலங்களில் மழைநீர் கழிவுநீருடன் கலந்து தேங்கி நிற்கிறது. சுரங்கப்பாதையின் நுழைவுவாயில் பகுதி புதர்கள் மண்டிய நிலையில் உரிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் குடியிருப்புகளுக்கு செல்லும் பொதுமக்கள், மருத்துவமனைகளுக்கு சென்று வரும் நோயாளிகள் மேம்பாலம் வழியாக 1 முதல் 2 கி.மீட்டர் தூரம் வரை சுற்றிக்கொண்டு சென்று வருகின்றனர்.
இந்த சுரங்கப்பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள சுரங்கப்பாதை போல் இருசக்கர வாகனங்கள் சென்று வரும் வகையில் இந்த சுரங்கப்பாதையை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
விபத்துகள் தடுக்கப்படும்
இதுகுறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குமாரசாமி பேட்டையை சேர்ந்த மணிகண்டன்:- குமாரசாமிபேட்டை ரெயில்வே மேம்பாலத்தின் வடக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரெயில்வே சுரங்கப்பாதை இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் ரெயில்வே மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இந்த சுரங்கப்பாதையில் மழை பெய்யும் போது முழுமையாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. இங்கு மழைநீர் தேங்காமல் இருக்க உரிய வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். சுரங்கப்பாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் மேம்பாலத்தில் நடந்து செல்வோர் எண்ணிக்கை குறையும். மேம்பாலத்தில் சாலையை குறுக்காக கடப்பவர்கள் விபத்துகளில் சிக்குவது தடுக்கப்படும்.
போக்குவரத்து நெரிசல்
தர்மபுரி சவுளுபட்டியைச் சேர்ந்த மாதப்பன்:-சவுளுபட்டி, மாட்டுக்கானூர், ரெட்டிபட்டி, சவுளூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் குமாரசாமிபேட்டை ரெயில்வே மேம்பாலத்திற்கு வந்து பென்னாகரம் சாலையில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்கும் பல்வேறு பணிகளுக்கும் சென்று வருகின்றனர். ரெயில்வே சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு வந்தால் இவர்கள் ரெயில்வே மேம்பாலத்திற்கு செல்லாமலேயே எளிதாக அவர்கள் போக வேண்டிய பகுதிக்கு செல்ல முடியும்.
இதன் மூலம் சுமார் 2 கி.மீ. தூரம் சுற்றி வருவது தவிர்க்கப்படும். ரெயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசலும் கணிசமாக குறையும். எனவே இந்த சுரங்கப்பாதையை விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
சீரமைக்க வேண்டும்
தர்மபுரி அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த முனுசாமி:- அன்னை சத்யா நகர், ஆவின் நகர், நந்தி நகர், சோகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்வேறு பணிகளுக்காக பழைய தர்மபுரி, சவுளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்பவர்கள் இப்போது குமாரசாமிபேட்டை ரெயில்வே மேம்பாலத்தை கடந்து அந்த பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு வந்தால் மேம்பாலத்தில் செல்லாமல் எளிதாக மேற்கண்ட பகுதிகளுக்கு சென்று வர முடியும். இதை கருத்தில் கொண்டு இந்த சுரங்கப்பாதையை விரைவில் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
சுரங்க பாதையில் மழைநீர் தேங்குவதை தடுக்க உரிய வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும். இந்த சுரங்கப்பாதையை நடந்து செல்வோர் மட்டுமின்றி இருசக்கர வாகனங்களில் செல்வோரும் பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.