திருமண மண்டபத்தில் இருந்து மணப்பெண் ஓட்டம்: உறவினர் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர்
|வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகனுடன் ஜோடியாக பங்கேற்ற மணமகள், நேற்று அதிகாலையில் திருமண மண்டபத்தில் இருந்து ஓடிவிட்டார்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் நேற்று உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு மண்டபத்தில் நடக்க இருந்தது. இதற்காக இருவீட்டார் சார்பிலும் அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு உறவினர், நண்பர்களுக்கு வழங்கப்பட்டது.
இதையொட்டி நேற்று முன்தினம் இரவு திருமண மண்டபத்தில் பெண் அழைப்பு மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மணமேடையில் மணமக்கள் பங்கேற்றனர். விழாவில் உறவினர்கள், நண்பர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு ஆடி, பாடி மகிழ்ந்தனர். மேலும் விருந்தும் நடந்தது. இதில் உறவினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். பின்னர் இரவு முழுவதும் மணமக்கள் மற்றும் உறவினர்கள் மண்டபத்திலேயே தங்கினர்.
மணப்பெண் ஓட்டம்
இதனை தொடர்ந்து நேற்று காலையில் திருமணத்துக்கான ஏற்பாடுகளில் இருவீட்டாரும் தீவிரமாக ஈடுபட்டனர். இதனிடையே அதிகாலை 3 மணி அளவில் மணப்பெண் திடீரென மாயமானார். இதனால் இருவீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர்.
பல இடங்களில் தேடிப்பார்த்தும், மணமகள் கிடைக்கவில்லை. விசாரித்ததில், திருமணம் பிடிக்காததால் மணப்பெண், மண்டபத்தில் இருந்து ஓடியது தெரிந்தது.
இருவீட்டு உறவினர்கள் மோதல்
தொடர்ந்து மணப்பெண் எங்கே என்று அவரது உறவினர்களிடம் மணமகனின் வீட்டார் கேட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இது முற்றி இருவீட்டு உறவினர்களிடையே மோதலாக மாறியது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். உடனே பெரியவர்கள் தலையிட்டு இருவீட்டாரையும் சமாதானப்படுத்தினர்.
பின்னர் மணமகனுக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து குறித்த முகூர்த்த நேரத்தில் திருமணத்தை நடத்த அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி உறவினர் பெண் ஒருவரிடம் பேசினர். அவரும் நிலைமையை புரிந்து கொண்டு ஒப்புக்கொள்ளவே, உடனடியாக அந்த பெண் மண்டபத்திற்கு வரவழைக்கப்பட்டார். இதையடுத்து அந்த பெண்ணுக்கும், வாலிபருக்கும் திருமணம் நடந்தது. அதன் பின்னரே திருமண மண்டபத்தில் அமைதி திரும்பியது.