வேலூர்
திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
|குடியாத்தம் அருகே திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
குடியாத்தம் ஒன்றியம் கொண்டசமுத்திரம் ஊராட்சி பாண்டியன் நகரை அடுத்த கிருஷ்ணா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம். இவரது மகன் மணிகண்டன் (வயது 25), கூலி தொழிலாளி. இவருக்கும் காட்பாடியை அடுத்த பொன்னை பகுதியைச் சேர்ந்த சுதா (19) என்பவருக்கும் 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் உள்ள ஒரு அறையில் உள்பக்கமாக தாழிட்ட நிலையில் உள்ளே சுதா இருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த மணிகண்டன் அக்கம்பக்கத்தினரை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று போய் பார்த்தபோது அங்கே சேலையில் தூக்குப்போட்ட நிலையில் சுதா இருந்தார். உடனடியாக அவரை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சுதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் திருமணமாகி 5 மாதங்களே ஆவதால் குடியாத்தம் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.