விக்கிரவாண்டியில் திருமணம் முடிந்த கையோடு வாக்களிக்க வந்த மணமக்கள்
|விக்கிரவாண்டியில் திருமணம் முடிந்த கையோடு புதுமணத் தம்பதி தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சட்டமன்ற தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசைகளில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் கப்பியம்புலியூரைச் சேர்ந்த அஜித்-சந்தியாவுக்கு திருவண்ணாமலையில் இன்று திருமணம் நடைபெற்ற நிலையில், திருமணம் முடிந்த கையோடு புதுமணத் தம்பதி மாலையும், கழுத்துமாக மணக்கோலத்திலேயே விக்கிரவாண்டி அருகே உள்ள கப்பியம்புலியூர் அரசு பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிக்கு வருகை தந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 3 மணி நிலவரப்படி 1.5 லட்சத்திற்கும் கூடுதலான வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர். இவர்களில், பெண்கள் அதிக அளவாக 78,949 பேர் வாக்கு பதிவு செய்துள்ளனர். ஆண்கள் 73,781 பேர் வாக்கு பதிவு செய்திருக்கின்றனர். 276 வாக்கு சாவடிகளில் விறுவிறுப்பாக வாக்கு பதிவானது நடைபெற்று வருகிறது.