மாமுல் வாங்கும் போலீசாருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
|மாமுல் வாங்கும் போலீசாருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக உள்துறை செயலாளர், டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை பெரியார் நகரில் மதுபானக் கடை அருகே பெட்டிக் கடைக்காரரிடம் வாரந்தோறும் ரூ.100 ரூபாய் மாமூல் வாங்கியதாக ஊதிய உயர்வு பலன்களை நிறுத்தி வைத்த உத்தரவை எதிர்த்து சிறப்பு உதவி ஆய்வாளர் கே.குமாரதாஸ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களை கேட்ட பின்னர் நீதிபதி வழக்கின் தீர்ப்பினை வாசித்தார். அப்போது, ஊதிய உயர்வு நிறுத்த தண்டனை மூலம் மாமூல் பெறுவதை தவறாக கருதவில்லை என்பது இந்த மனு தாக்கல் செய்ததில் தெளிவாகிறது என்று குறிப்பிட்டார்.
சமுதாயத்தையும், அரசின் நலத்திட்டங்கள் அமல்படுத்தப்படுவதையும் ஊழல் செல்லரிக்கிறது என்று குறிப்பிட்ட நீதிபதி, மாமூல் வாங்கும் போலீசாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டுமல்லாமல், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என தமிழக உள்துறை செயலாளர்,டிஜிபிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் மாமுல் வாங்கியதாக ஊதிய உயர்வு பலன்களை நிறுத்திய உத்தரவை எதிர்த்து உதவி ஆய்வாளர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.