விருதுநகர்
தமிழகத்தில் லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது
|தமிழகத்தில் லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது என பிரேமலதா கூறினார்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரத்திற்கு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று வந்தார். அப்போது அங்கு நடந்த விழாவில் கட்சி கொடியினை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதில் மாவட்ட, நகர, ஒன்றிய தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
விஜயகாந்தின் பிறந்தநாள் விழா, கட்சி தொடக்க நாளையொட்டி ராமானுஜபுரத்தில் 51 அடி உயரத்தில் தே.மு.தி.க. கொடியினை ஏற்றி அங்கே அலுவலகமும் அமைக்க உள்ளோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் முடித்து விட்டோம். அங்கீகரிக்கப்பட்ட மூன்றாவது கட்சியாக தே.மு.தி.க. விளங்கி வருகிறது. ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வமான வேட்பாளரை தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார். தற்போது தமிழகத்தில் லஞ்சம் ஊழல் அதிகரித்துள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. சாலை வசதி இல்லை. விவசாயம் முற்றிலும் முடங்கி விட்டது. தமிழகத்தில் தொழிற்சாலைகள் இல்லாததால் பெரும்பாலான இளைஞர்கள் வெளி நாடுகளுக்கு வேலை தேடி செல்வது வேதனை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.