சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்ட வழக்கு: கார்த்தி சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் சோதனை
|263 சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்ட வழக்கில் கார்த்தி சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று மீண்டும் சோதனை நடத்தினார்கள்.
சீனர்களுக்கு சட்டவிரோத விசா
2009-2014-ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய உள்துறை மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வகித்தார். அந்த சமயத்தில் பஞ்சாப் மாநிலத்தில் சீனாவை சேர்ந்த தனியார் நிறுவன ஒப்பந்தத்துடன் மின் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அப்போது சீனாவை சேர்ந்த 263 தொழில்நுட்ப ஊழியர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.50 லட்சம் லஞ்சம் பெறப்பட்டுள்ளது. இதனை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் புலன் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தற்போது சிவகங்கை தொகுதி எம்.பி.யாக இருக்கும் கார்த்தி சிதம்பரம், அவரது ஆடிட்டர் பாஸ்கர ராமன் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.
கார்த்தி சிதம்பரம் ஆஜர்
இந்த வழக்கின் அடிப்படையில் கடந்த மே மாதம் 17-ந் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகம் மற்றும் டெல்லி, மும்பை, பஞ்சாப் போன்ற இடங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த நேரத்தில் கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டில் இருந்தார்.
இந்த வழக்கின் முதல் குற்றவாளியாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சி.பி.ஐ. அதிகாரிகள் சேர்த்திருந்தனர். எனவே சோதனை முடிந்த மறுநாளே அவர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார். மேலும் அவர், வெளிநாட்டில் இருந்து திரும்பியவுடன் கடந்த மே 26-ந் தேதி டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
மீண்டும் சோதனை
இந்த நிலையில் டெல்லியில் இருந்து 7 பேர் அடங்கிய சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் நேற்று சென்னை வந்தனர். அவர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீட்டில் மீண்டும் சோதனை நடத்தினர். நேற்று நடைபெற்ற சோதனையின் போது கார்த்தி சிதம்பரம் வீட்டில் இல்லை.
போலீசார் பாதுகாப்புடன் மதியம் 2.30 மணிக்கு தொடங்கிய சோதனை 5.30 மணியளவில் நிறைவடைந்தது. சுமார் 3 மணி இந்த சோதனை நடைபெற்றது. கடந்த மே மாதம் 17-ந் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்திய போது கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டில் இருந்ததால், அவரது அறையில் மட்டும் சோதனை நடத்தப்படவில்லை என்று தெரிகிறது.
எனவே அந்த அறையில் மட்டும் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் அதிகாரிகள் கையில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சி.பி.ஐ. தரப்பில் அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
ப.சிதம்பரம் வீட்டில்...
ப.சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் நுங்கம்பாக்கத்தில் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். கடந்த முறை சோதனை நடைபெற்ற போது, இந்த வழக்கில் எனது பெயர் இல்லை என்று ப.சிதம்பரம் கூறியிருந்தார். ஆனால் நேற்றும் அவருடைய வீட்டில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.