சென்னை
சாலையோர தடுப்பை உடைத்துக் கொண்டு பாய்ந்தது: கார் கவிழ்ந்து சகோதரர்கள் உள்பட 3 பேர் பலி
|சாலையோர தடுப்பை உடைத்துக் கொண்டு பாய்ந்த கார் கவிழ்ந்து சகோதரர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் அருகே நேற்று அதிகாலை அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் சாலையோர இரும்பு தடுப்புகளை உடைத்துகொண்டு அங்கு இருந்த 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்தவர்கள் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்ததும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பூந்தமல்லி போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாசினி தலைமையில் வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விசாரணையில், விபத்தில் இறந்தவர்கள் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈக்குவார்பாளையத்தை சேர்ந்த ரமேஷ்பாபு (வயது 46), அவரது சகோதரர் சுரேஷ் பாபு (36) என்பதும், அவர்கள் இருவரும் அ.தி.மு.க. நிர்வாகிகள் என்பதும் தெரியவந்தது. மேலும் இந்த விபத்தில் காயமடைந்த அவர்களுடன் உடன் சென்ற பொக்லைன் எந்திர டிரைவர்களான வெங்கடேசன் (42), ராஜவேல் (25) மற்றும் சுதாகர் (34) ஆகியோரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுதாகர் பரிதாபமாக இறந்தார்.
ரமேஷ்பாபு, சுரேஷ்பாபு இருவரும் பொக்லைன் எந்திரங்களை சொந்தமாக வைத்து வாடகைக்கு விட்டு வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் பொக்லைன் எந்திரங்களை வாங்கும் எண்ணத்தில் அதனை பார்ப்பதற்காக பொக்லைன் எந்திர டிரைவர்களான வெங்கடேசன் (42), ராஜவேல் (25) மற்றும் டிரைவர் சுதாகர் (34), ஆகியோருடன் திண்டுக்கல் சென்றுள்ளனர்.
அங்கு பொக்லைன் எந்திரத்தை பார்த்து விட்டு நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல்லில் இருந்து காரில் திரும்பி வரும்போது இந்த விபத்து நடந்தது தெரியவந்துள்ளது. காரை ரமேஷ்பாபு ஓட்டி உள்ளார். விபத்தில் சிக்கிய காரை கிரேன் உதவியுடன் போக்குவரத்து போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். விபத்தில் இறந்த ரமேஷ்பாபு, சுரேஷ்பாபு, சுதாகர் ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.