திருநெல்வேலி
வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
|வள்ளியூரில் வீட்டின் கதவை உடைத்து நகை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வள்ளியூர்:
வள்ளியூர் எஸ்.கே.பி. நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் தியாகு. இவரது மனைவி கலா (வயது 45). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தியாகு இறந்துவிட்டார். இதனால் கலா வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவர் களக்காடு அருகே உள்ள கடம்போடுவாழ்வு கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். மீண்டும் வள்ளியூர் வீட்டிற்கு வந்து கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 1½ பவுன் தங்க திருமாங்கல்யமும், சுமார் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி குத்துவிளக்கு, குங்கும சிமிழ், வெள்ளி கப்பு போன்ற பொருட்களும் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கலா கொடுத்த புகாரின் பேரில் வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.