கோயில்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்- ஓபிஎஸ்
|அனைத்துக் கோயில்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதையும் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை,
முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;
"ஆலயங்களில் பின்பற்றப்பட்டு வரும் மரபுகளை மீறுவது, ஆகம விதிகளை மீறுவது, திருக்கோயிலுக்குள் நுழையும் தாழ்த்தப்பட்ட மக்களை வசைபாடுவது, திருக்கோயில் விழாக்களின்போது உயிரிழப்புகள் ஏற்படுவது என பல்வேறு துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் கடந்த இரண்டு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, அண்மையில், அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோயிலில் அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.கொங்கு நாட்டின் ஏழு சிவ ஸ்தலங்களில் பிரசித்திப்பெற்ற கோயிலாகக் கருதப்படுவதும், சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடிப் புகழ் பெற்ற திருத்தலமும், மிகப் பழமை வாய்ந்ததுமான திருக்கோயில் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள அருள்மிகு அவினாசி லிங்கேஸ்வரர் திருக்கோயில்.
அவிநாசி என்ற வார்த்தைக்கு ஒரு அற்புதமான பொருள் உண்டு. அதாவது விநாசம் என்றால் அழிவு. அவிநாசி என்றால் அழிவு அழிவு இல்லாதது. நீண்ட ஆயுளைக் அளிக்கக்கூடியவராகவும், எளிதில் அருள்புரியக் கூடியவராகவும் விளங்குபவர் அவிநாசி லிங்கேஸ்வரர். தீமைகள் நீங்கக்கூடிய ஸ்தலமாக, நவக்கிரஹ தோஷங்கள் நீங்கக்கூடிய திருக்கோயிலாக, வியாதிகளை நிவர்த்தி செய்யக்கூடிய திருக்கோயிலாக, ஒற்றுமையை அதிகரிக்கக்கூடிய திருக்கோயிலாக, திருமணத் தடையை அகற்றக்கூடிய ஒப்பற்ற ஆலயமாக இந்த ஆலயம் விளங்குகிறது.
இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த இந்த ஆலயத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஓர் அசம்பாவிதம் நடந்துள்ளது. 23-05-2023 அன்று திருக்கோயில் திறக்கப்பட்டபோது, திருக்கோயிலின் பலிபீடம் நாயன்மார்களின் 63 சிலைகள் அலங்கோலப்படுத்தப்பட்டும், சேதப்படுத்தப்பட்டும், ஒவ்வொரு சன்னதிக்கும் மேல் உள்ள கோபுர கலசங்கள் சுக்குநூறாக உடைக்கப்பட்டும் இருந்தன. திருக்கோயிலுக்குள் உள்ள முருகன் சன்னதியில் வெண்கலத்தால் செய்யப்பட்ட வேல் மற்றும் சேவல் கொடியுள்ள இரண்டு வேல்கள் மற்றும் சில பொருட்கள் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இறைவனுக்கான பூஜைகள் ஏதும் அன்று நடைபெறவில்லை. இது அப்பகுதி மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திருக்கோயில் முழுக்க முழுக்க இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தாலும், திருக்கோயிலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதும் அரசால் மேற்கொள்ளப்படவில்லை என்பதே அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக் இருக்கிறது. தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கே மேற்படி அசம்பாவிதத்திற்கு முழுக் காரணம். இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கேற்ப; தமிழ்நாட்டில் உள்ள பல திருக்கோயில்களில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே நிலவுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். திருக்கோயில்களில் திருட்டு சம்பவங்கள் நடப்பதை ஓர் அபசகுனமாக பக்தர்கள் கருதுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் இனி வருங்காலங்களில் நடக்காதிருப்பதையும், அனைத்துக் கோயில்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதையும் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்". இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.