பெரம்பலூர்
பீரோவை உடைத்து ரூ.10 ஆயிரம் திருட்டு
|பீரோவை உடைத்து ரூ.10 ஆயிரம் திருட்டுபோனது.
பெரம்பலூர் மாவட்டம், ஈச்சம்பட்டி புது ஆத்தூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் அப்துல் மாலிக் (வயது 48). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். அப்துல் மாலிக் நேற்று மதியம் வீட்டை பூட்டி விட்டு ஈச்சம்பட்டியில் ஒரு துக்க காரியத்துக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். அப்போது அப்துல் மாலிக் வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்ட அவரது உறவினர்கள், அவருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அவரும் விரைந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு, வீட்டிற்குள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும் பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருந்தது. அவரது வீட்டின் அருகே வெள்ளை நிற கார் ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததாகவும், அதில் இருந்த நபர்கள் அப்துல் மாலிக் வீட்டில் இருந்த பணத்தை திருடி சென்றிருக்கலாம் என்று அக்கம், பக்கத்தினர் சந்தேகித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அப்துல் மாலிக் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இதற்கிடையே போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.