சேலம்
சேலம் மாவட்டத்தில் கூடுதலாக 1,253 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்
|சேலம் மாவட்டத்தில் கூடுதலாக 1,253 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் கலெக்டர் கார்மேகம் தகவல்
சேலம்
சேலம் மாவட்டத்தில் கூடுதலாக 1,253 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.
ஒருங்கிணைப்பு கூட்டம்
சேலம் மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதிகளில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் விவரம், சமையலறை கூடங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், புதிய சமையலறை கூடங்கள் கட்டுதல், சுய உதவிக்குழுவில் பணியாற்றும் அனுபவமிக்க சமையல் பணியாளர்கள் தேர்வு செய்தல் போன்றவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-
அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வேலை நாட்களில் முதல்-அமைச்சரின் இலவச காலை உணவு வழங்கப்படும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் 54 தொடக்க பள்ளிகளிலும், 2-ம் கட்டமாக 24 மாநகராட்சி தொடக்கப்பள்ளிகளிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
விரிவாக்கம்
இந்தநிலையில் தமிழ்நாடு முழுவதும் ஊரக மற்றும் நகர்புறங்களில் உள்ள 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள 1,253 பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை கூடுதலாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் 86 ஆயிரத்து 56 மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் அலர்மேல்மங்கை, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) பெரியசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.