< Back
மாநில செய்திகள்
தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் காலை உணவுத்திட்டம்
திருவாரூர்
மாநில செய்திகள்

தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் காலை உணவுத்திட்டம்

தினத்தந்தி
|
26 Aug 2023 12:15 AM IST

தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் காலை உணவுத்திட்டம்

மன்னார்குடி, கோட்டூர், கொரடாச்சேரி, நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

தமிழ்நாடு முதல்-அமைச்சர் நேற்று விரிவுப்படுத்தப்பட்ட முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை நாகை மாவட்டம் திருக்குவளையில் தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த உள்ளிக்கோட்டை ஊராட்சி சம்மட்டிக்குடிகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விரிவுப்படுத்தப்பட்ட முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். அப்போது அவருடன் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் உடனிருந்தனர்.

777 அரசு பள்ளிகளில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது

பின்னர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசுகையில்,

முதற்கட்டமாக மன்னார்குடி நகராட்சி தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த திட்டம் ஊரக பகுதிகள் மற்றும் ஊரக பகுதியையொட்டி உள்ள பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் உள்ள 750 அரசு பள்ளிகள் மற்றும் ஊரக பகுதியையொட்டி உள்ள பேரூராட்சி பகுதியில் அரசு பள்ளிகள் 27 என மொத்தம் 777 அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் நேற்று மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம், உள்ளிக்கோட்டை ஊராட்சி, சம்மட்டிக்குடிகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றார். இதில் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சவுந்தர்யா, ஊராட்சி மன்றத்தலைவர் ஜோதி ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

கொரடாச்சேரி அருகில் உள்ள அபிவிருத்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். முன்னதாக இந்த பள்ளியில் புதிதாக தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.7.49 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய சமையல் கூட கட்டிடத்தினை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் மாணவ- மாணவிகளுக்கு உணவுகளை பரிமாறி அவர்களுடன் தரையில் அமர்ந்து சாப்பிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், மாவட்டக் கல்வி அலுவலர் மாதவன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சேகர் கலியபெருமாள், கொரடாச்சேரி ஒன்றியக்குழுத்தலைவர் உமாப்பிரியா, துணைத்தலைவர் பாலச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலம்

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம் முழுவதும் 88 மையங்களில் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. அதன்படி பொதக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேற்கில் மாவட்ட ஊராட்சி செயலாளர் சந்தானம் தலைமையில் ஒன்றியக்குழுத்தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி கார்த்திகேயன், ஊராட்சி தலைவர் மல்லிகா பிச்சையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தாதன் திருவாசல் தொடக்கப்பள்ளி

கோட்டூர் தாதன் திருவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சர் காலை உணவு திட்டத்தை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன், துணை தலைவர் விமலா ரவிச்சந்திரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சுளா, ஊராட்சி மன்ற தலைவர் கே.ஜி. ஆனந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்