< Back
மாநில செய்திகள்
946 பள்ளிகளில் காலை உணவு திட்டம்
சிவகங்கை
மாநில செய்திகள்

946 பள்ளிகளில் காலை உணவு திட்டம்

தினத்தந்தி
|
26 Aug 2023 12:45 AM IST

சிவகங்கை மாவட்டத்தில் 946 பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டத்தில் 946 பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

காலை உணவு திட்டம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இத்திட்ட தொடக்க விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் கலெக்டர் ஆஷாஅஜீத் கலந்துகொண்டு மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டனர்.

இத்திட்டம் குறித்து அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயனடையும் வகையில் சமூக சிந்தனையுடன் செயல்பட்டு இதுபோன்று பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெற்றோர்களின் சுமையை குறைக்கும் வகையில் காலை உணவு திட்டத்தை அறிவித்து இந்தியாவிலேயே முதல் திட்டமாக இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். இதற்கு முன்பு மதிய உணவு திட்டத்தை முன்னாள் முதல்-அமைச்சர்கள் காமராஜர், எம்.ஜி.ஆர். ஆகியோர் செயல்படுத்தினாலும் கூட இந்த திட்டத்தில் சத்தாண உணவு வழங்க வேண்டும் என எண்ணி மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி வாரத்தில் 5 நாட்களும் முட்டையுடன் கூடிய மதிய உணவை வழங்கினார்.

ரூ.2 கோடியே 64 லட்சம் ஒதுக்கீடு

இந்த காலை உணவு திட்டத்தின் வாயிலாக 20 லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள். இதற்கு முதல்-அமைச்சர் ரூ.404 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் 946 பள்ளிகளை சேர்ந்த 35 ஆயிரத்து 993 மாணவர்கள் பயனடையும் வகையில் ரூ.2 கோடியே 64 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் வானதி, திருப்பத்தூர் யூனியன் தலைவர் சண்முகவடிவேல், உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் வெண்ணிலா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ரவி, யூனியன் கவுன்சிலர் ஜெயபாரதி, கண்டவராயன்பட்டி ஊராட்சி தலைவர் அபிராமிகாந்தி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்