கடலூர்
மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்
|கடலூரில் 15 பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்காக காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
காலை உணவு
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதில் உப்புமா, கிச்சடி, பொங்கல், கிச்சடியுடன் இனிப்பு உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த காலை உணவு வழங்கும் திட்டத்தை நேற்று முன்தினம் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில், கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 15 அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 630 மாணவர்களுக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான தொடக்க விழா கடலூர் வண்டிப்பாளையம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.
அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
விழாவில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் தலைமை தாங்கி, 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து, குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிட்டனர்.
கலெக்டர் பாலசுப்பிரமணியம், எம்.எல்.ஏ.க்கள் அய்யப்பன், சபா.ராஜேந்திரன், வேல்முருகன், ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி கவுன்சிலா் சங்கீதா செந்தில்முருகன் வரவேற்றாா்.
சிறுதானியங்கள்
இதையடுத்து அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் கூறுகையில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் ஒரு குழந்தைக்கு 150 முதல் 200 கிராம் உணவு மற்றும் 60 மி.கி.காய்கறி யுடன் கூடிய சாம்பார் வழங்கப்படும்.
மேலும் ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவினை தினசரி காலை 7.30-க்குள் சமைத்து, மாநகராட்சியில் உள்ள 15 தொடக்கப்பள்ளிகளுக்கும் இரண்டு வாகனங்கள் மூலமாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வசம் ஒப்படைக்கப்படும்.
ஆரோக்கியம்
தினந்தோறும் காலை 8.15 மணி முதல் 8.50 மணிக்குள் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படும். குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுவதால் அவர்கள் பசியின்றி சுறுசுறுப்பாக படிப்பில் கவனம் செலுத்துவார்கள். சத்தான உணவினை சாப்பிடுவதால் நல்ல ஆரோக்கியமாக இருப்பார்கள் என்றனர்.
இதில் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயசுந்தரம், மாநகராட்சி கவுன்சிலர்கள் பிரசன்னா, சரஸ்வதி வேலுச்சாமி, விஜயலட்சுமி செந்தில், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன், தி.மு.க. இளைஞரணி பாலாஜி, மாவட்ட பிரதிநிதி துா்கா செந்தில், முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.