< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவ-மாணவிகளுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

பள்ளி மாணவ-மாணவிகளுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்

தினத்தந்தி
|
17 Sept 2022 12:15 AM IST

பள்ளி மாணவ-மாணவிகளுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்

வெளிப்பாளையம்

நாகையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்

நாகை டாடா நகர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு உணவு பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் முகமது ஷா நவாஸ், நாகைமாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செய்து நடைமுறைப்படுத்தி வருகிறார். நகர பகுதிகளிலும், கிராம பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்திருக்கிறது.

11 பள்ளிகளில்

பள்ளிகள் மிக தூரமாக இருப்பது மட்டுமல்ல. சிலருடைய குடும்ப சூழலும் இதற்கு காரணமாக இருக்கிறது. இதனை மனதில் கொண்டு தீட்டப்பட்ட திட்டம் தான் காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டம்.

நாகை நகராட்சி உட்பட்ட 11 பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டமானது தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினமும் பல்வேறு விதமான சிற்றுண்டி வகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி திங்கட்கிழமை உப்புமா வகை, செவ்வாய்க்கிழமை கிச்சடி வகை, புதன் கிழமை பொங்கல் வகை, வியாழக்கிழமை உப்புமா வகை, வெள்ளிக்கிழமை கிச்சடியுடன் இனிப்பு வகைகள் வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் நகர மன்ற தலைவர் மாரிமுத்து, நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்