சிவகங்கை
பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்
|பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் காரைக்குடி நகராட்சி, எஸ்.புதூர் ஊராட்சியில் இன்று தொடங்கப்பட உள்ளது என கலெக்டர் கூறினார்.
திருப்பத்தூர்,
பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் காரைக்குடி நகராட்சி, எஸ்.புதூர் ஊராட்சியில் இன்று தொடங்கப்பட உள்ளது என கலெக்டர் கூறினார்.
மக்கள் தொடர்பு முகாம்
திருப்பத்தூர் அருகே பழைய திருக்கோளக்குடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட 323 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகள் சார்பில் ரூ.63 லட்சத்து 49 ஆயிரத்து 86 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கி பேசியதாவது:-
திருக்கோளக்குடி ஊராட்சியில் 2022-23-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.39 லட்சம் மதிப்பீட்டில் திருக்கோளக்குடி முதல் திருமலை வரை மெட்டல் சாலை, ரூ.3.75 லட்சத்தில் திருக்கோளக்குடி மயானசாலையில் மெட்டல் சாலை, ரூ.7.54 லட்சத்தில் மிதிமலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர், ரூ.6.82 லட்சத்தில் திருக்கோளக்குடி மெயின்ரோடு முதல் முருகன் கோவில் மலையடிவாரம் வரை பேவர்பிளாக் சாலை என மொத்தம் ரூ.27.50 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
காலை உணவு திட்டம்
இதுதவிர ஊராட்சியின் உபரி நிதி ரூ.14 லட்சம் உள்ளது. மேற்கண்ட நிதியின் கீழ் நீர்த்தேக்க தொட்டி புதுப்பித்தல், ஒவ்வொரு இல்லங்களுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், இன்று(வியாழக்கிழமை) 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் நமது மாவட்டத்தில் முதற்கட்டமாக காரைக்குடி நகராட்சி மற்றும் எஸ்.புதூர் ஊராட்சி பகுதியில் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கண்காட்சி
முன்னதாக வேளாண்மைத்துறை, பொது சுகாதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறை மூலம் பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார்.
விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி மணிவண்ணன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் தனபாலன், கூட்டுறவுத்துறை சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீனு, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் காமாட்சி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் அழகுமலை, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) குமார், ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன், திருப்பத்தூர் தாசில்தார் வெங்கடேசன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.