< Back
மாநில செய்திகள்
பழமையான பாலத்தில் ஏற்பட்ட உடைப்பால் போக்குவரத்து துண்டிப்பு
அரியலூர்
மாநில செய்திகள்

பழமையான பாலத்தில் ஏற்பட்ட உடைப்பால் போக்குவரத்து துண்டிப்பு

தினத்தந்தி
|
29 Dec 2022 12:13 AM IST

ஜெயங்கொண்டம் அருகே பழமையான பாலத்தில் உடைப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் 5 கிலோ மீட்டர் சுற்றிச்செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என கிராம மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

பாலத்தில் உடைப்பு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமம் மேலவெளி செக்கடி தெருவில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த பாலம் உள்ளது. இந்த பாலம் பெரிய அளவிலான பாறை கற்களை கொண்டு 3 சிறிய கண், 2 பெரிய கண் அளவில் தண்ணீர் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் கட்டப்பட்டு சுமார் 70 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் வலுவிழந்து கடந்த மாதம் பெய்த மழையின்போது உடைந்து பாலத்தின் நடுவே பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டது. மேலும் பாலமும் சேதம் அடைந்து உள்ளதால் போக்குவரத்து வசதி இல்லாமல் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

5 கிலோ மீட்டர் சுற்றி...

சூர்யா:- பழமையான இந்த பாலமானது சேதம் அடைவதற்கு முன்பு வீராக்கன், நாகல்குழி, செம்மண்பள்ளம், உஞ்சினி, ஆனந்தவாடி, செந்துறை வழியாக அரியலூர் செல்ல பெரிதும் உதவியாக இருந்தது. தற்போது இந்த பாலம் உடைந்துள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாதநிலை ஏற்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் அரியலூர் செல்ல சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. இதனால் நேரம், பெட்ரோல்-டீசல் விரயம் அதிகம் ஏற்படுகிறது. இலையூர் கிராமம் மேலவெளி செக்கடி தெருவில் முறையான வடிகால் வசதி அமைக்கப்படாமல் உள்ளதால் இப்பகுதியில் கனமழை பெய்யும்போது மழைநீர் செல்ல வழியின்றி தாழ்வான பகுதியில் குளம்போல் தேங்குவதுடன், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்து விடுகிறது. இதனால் நாங்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறோம். பாலத்தை சரிசெய்து இப்பகுதியில் சாலையை உயர்த்தி வடிகால் வசதி அமைத்து கொடுத்தால் பெரிதும் பயன்உள்ளதாக இருக்கும்.

காயம் அடைகின்றனர்

ரெங்கநாதன்;- இந்த சாலையை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சுற்று வட்டார பகுதியில் உள்ள விளைநிலங்களில் விவசாயம் செய்வதற்கு தேவையான இடுப்பொருட்களை எடுத்துச்செல்லவும், விளைவிக்கப்பட்ட பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்லவும் இந்த சாலையை விவசாயிகள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். வெளியூர்களில் இருந்து வருபவர்கள் இந்த பாலத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் இரவு நேரத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். மேலும் இந்த வழியாக நடந்து செல்பவர்கள் பாலத்தின் துளையில் விழுந்து காயம் அடைந்த சம்பவங்களும் நடந்துள்ளன. தற்காலிகமாக இந்த பாலத்தில் உள்ள துளைக்கு அருகே பொதுமக்கள் வராதவாறு தற்காலிகமாக மண்மேடு போட்டு பாதுகாத்து வருகின்றோம். இருப்பினும் சிலர் எப்போதும்போல் வந்து விழுந்து விடுகின்றனர்.

தகராறு ஏற்படும் சூழல்

செல்வகணபதி:- நான் சிறு வயதில் இருக்கும்போது கட்டப்பட்ட இந்த பாலம் கிட்டத்தட்ட இதுவரை 3 முறை பழுதடைந்தது. அவ்வப்போது அதனை சரி செய்து பயன்படுத்தி வந்தோம். இருப்பினும் இந்த பாலத்திற்கு ஆயில் குறைந்து விட்டதால் தற்போது பாலத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் யாரேனும் உயிரிழந்துவிட்டால் இறந்தவரின் உடலை காலம் காலமாக இந்த பாலத்தின் வழியாகத்தான் கொண்டு செல்வது வழக்கம். தற்போது பாலம் உடைந்துள்ளதால் இறந்தவரின் உடலை எடுத்து செல்ல பக்கத்தில் உள்ள தெரு வழியாக நடந்து எடுத்து செல்லும் நிலை உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ளவர்களுடன் தகராறு ஏற்படும் நிலை உள்ளது.

எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

சங்கர்:- ஆட்சி மாறுகிறது காட்சி மாறுகிறது எங்கள் அவல நிலை மட்டும் இன்னும் மாறவில்லை. வாக்கு சேகரிக்க வருபவர்கள் இதை செய்கிறோம். அதை செய்கிறோம் என்று சொல்லி வாக்கு சேகரித்து சென்று விடுகின்றனர். அத்தோடு சரி. எங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. கிட்டத்தட்ட ஒரு மாதமாக இந்த பாலம் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் எங்களுக்கு மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள் என அனைவரும் இந்த பள்ளத்திற்குள் விழுந்து அடிபட்ட சம்பவம் நடந்துள்ளது. எனவே பிரதான சாலையாக இருக்கும் இந்த சாலையை இருபுறமும் நீர்வரத்து வாய்க்கால் அமைப்பதுடன் சாலையை உயர்த்தி உடைந்த பாலத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டித்தர வேண்டும்.

உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு

பிரபாகரன்:- இந்த சாலை வழியாக பள்ளி வாகனங்கள் அதிகமாக சென்று வந்த நிலையில் இந்த பாலம் உடைந்ததன் காரணத்தால் பள்ளி வாகனம் உள்ளே செல்ல முடியாத நிலையில் பள்ளி மாணவ-மாணவிகள் சுற்றிச்செல்லும் நிலை உள்ளது. தற்போது இந்த பாலத்தின் வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டுமே சென்று வருகின்றன. அதுவும் இந்த பாலம் வலுவிழந்து உள்ளதால் அவர்களின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை. வாகனங்கள் செல்லும்போது இந்த பாலம் திடீரென இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வெளியூர்களில் இருந்து இந்த வழியாக செல்லும் நான்கு சக்கர வாகனங்கள் தவறுதலாக இந்த பாலத்தில் சென்று விபத்தில் சிக்கிக்கொள்ள கூடாது என்பதற்காக பாலத்தில் செல்லமுடியாதவாறு மண்ணை கொட்டியுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உடைந்த பாலத்தை ஆய்வு செய்து அகற்றிவிட்டு புதிய காலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்